தூத்துக்குடி மாவட்டம் தளவாய்புரம் பகுதியில் சட்டவிரோதமாக யூரியா மூடைகளை பதுக்கி வைத்திருப்பதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் தமிழ்நாடு வேளாண்மை துறை ஓட்டப்பிடாரம் வட்ட உர ஆய்வாளரான சிவகாமி தலைமையிலான தூத்துக்குடி வேளாண்மை துறையினர் மற்றும் குளத்தூர் காவல் நிலைய போலீசார் குளத்தூர் தளவாய்புரம் நடு தெருவில் உள்ள ஒரு குடோனில் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு சிலர் அரசு மானியத்துடன் விவசாயத்திற்கு வழங்கப்படும் மஞ்சள் நிற அரசு முத்திரையுடன் உள்ள யூரியா மூடைகளை பிரித்து அதில் உள்ள உரத்தை வேறு வெள்ளை நிற சாக்கு பைகளில் மாற்றி அதிக விலைக்கு தனியார் கம்பெனிகளுக்கு விற்பனை செய்ய ஒரு லாரியில் ஏற்றிக்கொண்டு இருந்ததும், மேலும் அந்த குடோனில் இலங்கைக்கு கடத்துவதற்காக பீடி இலை பண்டல்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து மேற்படி ஓட்டப்பிடாரம் வட்ட உர ஆய்வாளர் சிவகாமி அளித்த புகாரின் பேரில் குளத்தூர் காவல் நிலைய போலீசார் அந்த குடோனில் உரம் மற்றும் பீடி இலைகளை பதுக்கி வைத்திருந்த திண்டுக்கல் மாவட்டம் நாகர் நகரை சேர்ந்த தேவமணி மகன் கார்த்திக் (39), திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை சேர்ந்த சம்சுதீன் மகன் சைய்யதலி (35), புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பகுதியைச் சேர்ந்த அசக் ஹுசைன் மகன் அசன் பாஷா (50), தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான அந்தோணி ராஜ் மகன் ராஜேஷ் குமார் (35), சரவணக்குமார் மகன் அரவிந்த் (22), தூத்துக்குடி சிலுவைபட்டியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் முருகேசன் (43),
தூத்துக்குடி மேலூரைச் சேர்ந்த சுரேஷ் மகன் அந்தோணி கார்த்திக் (27), தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர்களான கசாலி மகன் அப்துல் ரகுமான் (24) மற்றும் அந்தோணிசாமி மகன் கனிராஜ் (42) ஆகிய 9 பேரையும் கைது செய்து, அந்த குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள 2,400 கிலோ பீடி இலைகள், ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 14,400 கிலோ யூரியா உரம் மூடைகள், ஒரு லாரி மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து குளத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment