ஸ்ரீவைகுண்டம் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆலோசனைக் கூட்டம் ஏரல் வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தாமிரபரணி ஆற்றில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கு கீழ் பகுதியில் புன்னக்காயல் வரை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் மழை வெள்ள காலங்களில் நீரோட்டம் தடைபட்டு குடியிருப்பு பகுதிகளில் வெள்ள அபாயத்தை ஏற்படுத்துகிறது. மேலும் பல்வேறு இடங்களில் சாக்கடை கழிவுநீர் கலந்து தாமிரபரணி ஆறு மாசடைந்து வருகிறது.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் முதல் புன்னக்காயில் வரை ஆக்கிரமிப்பு மற்றும் மாசு காணப்படுவதை கண்டித்து அக்டோபர் 18ஆம் தேதி ஏரல் காந்தி சிலை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சமூக ஆர்வலர் ஜெயபாலன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் உத்தரவின் பேரில் தாமிரபரணி ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் மாசுபடுவதை தடுப்பது தொடர்பாக ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஏரல் வட்டாட்சியர் கோபால் தலைமை தாங்கினார். கூட்டத்தில், தாமிரபரணி ஆறு மாசு அடைவதை தடுப்பது தொடர்பாகவும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
இக்கோரிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளான நீர்வளத்துறை, பேரூராட்சி துறை, குடிநீர் வடிகால் வாரியம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வனத்துறை மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் துறை மூலம் கடிதம் அனுப்பி வருகிற நவம்பர் 6ஆம் தேதி சிறப்பு கூட்டம் நடத்தி தாமிரபரணி ஆறு மாசு அடையாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆக்கிரமப்புகளை அகற்றுவது குறித்தும் முடிவெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அக்டோபர் 18ஆம் தேதி நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர் தெரிவித்தனர்.
கூட்டத்தில் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜெயபாலன், பொதுச் செயலாளர் அய்கோ, மாவட்டத் துணைச் செயலாளர் நெப்போலியன் சுப்பையா, செயற்குழு உறுப்பினர்கள் குயிலி நாச்சியார், பொன் ராணி, பேய்குளம் ராஜா சிங், வட்ட பொறுப்பாளர்கள் ஜான்சன், பொன்சேகர், லென்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏரல் செய்தியாளர் சேதுபதிராஜா
No comments:
Post a Comment