தேரிக்குடியிருப்பு கற்குவேல அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு திருவிழா கோலாகலம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 16 December 2024

தேரிக்குடியிருப்பு கற்குவேல அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு திருவிழா கோலாகலம்

தேரிக்குடியிருப்பு கற்குவேல அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு திருவிழா கோலாகலம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. 

திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பில் உள்ள கற்குவேல் அய்யனார் திருக்கோவிலில் கள்ளர்வெட்டு நிகழ்ச்சி, நேற்று மாலை நடைபெற்றது. 

சாமி ஆடும் நபர்கள் கையில் பெரிய ஓலைப் பெட்டியை வைத்துக்கொண்டு வேகமாக ஓடி, கோயில் வளாகத்தில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பழம், வெற்றிலை, தின்பண்டங்கள், பலகாரங்கள், விளையாட்டு சாமான்கள், பூஜைப் பொருள்கள் எனக் கண்ணில் பட்ட பொருள்களையெல்லாம் எடுத்து ஓலைப்பெட்டிக்குள் போட்டனர்.

பின்னர் களவெடுத்த அனைத்து சாமிகளும் கோயிலுக்கு பின்புறம் உள்ள செம்மண் தேரிக்கு வந்தனர். அவர்களைத் தொடர்ந்து அய்யனாரின்‌ அரிவாள் பக்தர்கள் புடைசூழ, கள்ளராக பாவிக்கப்பட்ட குங்குமம் பூசிய செவ்விளநீரை வெட்டுவதற்காக வந்தது. 

அங்கு, குவிக்கப்பட்ட மணல் மேட்டில் வைக்கப்பட்ட செவ்விளநீரை அரிவாளால் வெட்டும் கள்ளர்வெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, இளநீர் வெட்டப்பட்ட இடத்தில் உள்ள செம்மண்ணை பக்தர்கள் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றன. 

அந்த செவ்விளநீரின் தண்ணீர் பட்ட மண்ணைப் போட்டி போட்டுக் கொண்டு பக்தர்கள் எடுத்தனர். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அன்புமணி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி, திருச்செந்தூர் டிஎஸ்பி முகேஷ் குமார், திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன், உறுப்பினர்கள் குமார், முத்துக்குமார்,முருகபெருமாள், பிரபா, செயல் அலுவலர் காந்திமதி, முக்காணி ஒன்றிய குழு தலைவர் பேச்சிதாய் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்

No comments:

Post a Comment

Post Top Ad