முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 7 November 2024

முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா.

முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த 2ம்தேதி காலை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. விழா நாட்களில் கோயிலில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, 

பூஜைகள், சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மேலும் ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பிரகாரம் வழியாக பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட சண்முக விலாச மண்டபத்தை வந்தமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடந்தது. 

மாலை 4.30 மணிக்கு திருக்கோயில் கடற்கரையில் வைத்து பக்தர்களின் விண்ணை முட்டும் அரோகரா கோஷத்துடன் சூரசம்ஹாரம் நடந்தது. சூரபத்மனை,ஜெயந்தி நாதர் வதம் செய்தார்.

இதில் பலலட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு கண்டு மகிழ்ந்தனர். கடற்கரை முழுவதும் மனித தலைகளாகவே காட்சி அளித்தது. முன்னதாக காலை முதலே திருக்கோயில் வளாகம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. 

பக்தர்கள் திருக்கோயில் வளாகத்தில் பக்திப்பாடல்கள் பாடியும், பஜனை பாடியும் மகிழ்ந்தனர். சூரசம்ஹாரம் முடிந்ததும் சந்தோஷ மண்டபத்தில் சுவாமி- அம்பாளுக்கு அலங்காரம், தீபாராதனைநடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் கிரிப்பிரகாரத்தில் உலா வந்து கோவிலை சேர்ந்த பின் அங்கு சாயாபிஷேகம் நடந்தது.


விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் தென் மண்டல டிஐஜி மூர்த்தி தலைமையில், மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜாண், திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் உள்ளிட்ட சுமார் 4000க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர், கடலோர காவல்படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad