விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 22 August 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (22.08.2024), விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தெரிவித்ததாவது:-
குறுகிய கால நேரத்தில் விவசாயிகள் கூட்டத்திற்கு வந்தற்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். பொதுவாக விவசாயம் சார்ந்த பிரச்சனைகளுக்கு அரசும், அரசு கூறும் தீர்வுகளுக்கும் எந்த மாற்றமும் இருக்காது. நானும் நெல் மற்றும் தென்னை விவசாயத்தை சார்ந்த விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் தான். விவசாயம் சார்ந்த பிரச்சனைகளை என்னால் எளிதாக புரிந்து கொள்ளமுடியும். உங்களுடைய பிரச்சனைகளை துறைச் சார்ந்த அலுவலர்களுடனோ அல்லது என்னிடமோ தெரிவிக்கலாம். உங்கள் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வும், உரிய நடவடிக்கையும் சரி செய்வதற்கான முழு முயற்சிகளை எடுப்போம்.
உங்களுக்கு தேவையான உதவி மற்றும் கோரிக்கைகளை எங்களிடம் எப்போது வேண்டுமென்றாலும் சொல்லலாம்.

உங்களுடைய கோரிக்கைகளின் தீர்வுகளுக்கு முறையாக அடுத்தடுத்த கூட்டத்தில் செய்து தருவோம். தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறைக்கு நிறைய பல திட்டங்களை கொடுத்துள்ளது. அந்த திட்டங்களின் தன்மை உங்களுக்கு தேவை இருக்கிறதா என்பதை சொல்லுங்கள் ஒருவேளை நமது மாவட்டத்திற்கு குறைவான திட்டங்கள் கொடுத்திருக்கிறார்கள் என்பது தோன்றினால் என்னிடம் சொல்லுங்கள். தேவையுள்ளது என்றால் நிச்சயமாக திட்டப் பயனாளிகள் விபரம் கொடுத்து கூடுதலாக திட்டப் பயன்களை பெறலாம். 

நடப்பு ஆகஸ்ட் 2024 மாத தேவைக்கு நமது மாவட்டத்திற்கு 2030 மெ.டன் யூரியா, 1550 மெ.டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 450 மெ.டன் டி.ஏ.பி ஒதுக்கீடு செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட உர நிறுவனங்களால் இம்மாத தேவைக்கான உரங்கள் 900 மெ.டன் யூரியா 1000 மெ.டன் டி.ஏ.பி மற்றும் 500 மெ.டன் காம்ப்ளக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

2023-2024ம் ஆண்டு ராபி பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உளுந்து பயிருக்கு ரூ.58.56 கோடி, பாசிப்பயறுக்கு ரூ.14.161 கோடி, மொத்தம் ரூ.72.721 கோடி 35607 விவசாயிகளுக்கு இப்கோ-டோக்கியோ காப்பீட்டு நிறுவனத்தால் பயிர் காப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மக்காச்சோளம், கம்பு, சோளம், எள், நிலக்கடலை, நெல்-, சூரியகாந்தி மற்றும் பருத்தி ஆகிய பயிர்களுக்கு மத்திய அரசின் மானியத்தொகை விடுவிக்கப்பட்டவுடன் இப்கோ-டோக்கியோ காப்பீடு நிறுவனத்தால் பயிர் காப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு விரைவில் விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2023 டிசம்பர் மாதம் பெய்த அதீத கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நிவாரணமாக பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பேரிடர்க்கு முன் பதிவு செய்த விவசாயிகளுக்கு வாழை, கொத்தமல்லி, வெங்காயம் மற்றும் சிவப்பு மிளகாய் பயிர்களுக்கு ரூ.21.96 கோடி இழப்பீட்டு தொகையானது 13418 விவசாயிகளுக்கு இப்கோ-டோக்கியோ காப்பீடு நிறுவனத்தால் விடுவிக்கப்பட்டு விட்டது. 

பேரிடர்க்கு பிறகு பதிவு செய்த விவசாயிகளும் பயன்பெறும் வகையில் காப்பீட்டு திட்டத்திற்குரிய மகசூல் விவர அறிக்கை தயார் செய்ய களப்பணிகள் முடிவுப்பெற்று படிவங்கள் புள்ளியியல் துறையினருக்கு கூர்ந்தாய்விற்காக சமர்ப்பிக்கப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

2024-25 ஆம் ஆண்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் 80 கிராம பஞ்சாயத்துகளில், தரிசு நிலங்களின் அடிப்படையில் தரிசு நில தொகுப்புகள் அமைக்கவும், தனி நபர் தரிசு நிலத்தில் மானியத்தில் முட்புதர் அகற்றி விவசாயம் செய்ய பயனாளிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. 

முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் மண்புழு உரம் தயாரித்தல் மையம் அமைத்தல், பசுந்தாள் உரம் விநியோகம், உயிர்ம வேளாண்மைக்கான மாதிரி பண்ணைத் திடல் உருவாக்குதல், வேப்பங்கன்றுகள் நடுதல் ஆகிய திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

2024-25 ஆம் ஆண்டிற்கு இத்திட்டத்தில் உளுந்து, பாசி, சிறுதானிய விதைகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கிட ஆணை பெறப்பட்டுள்ளது. தரமான விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் மற்றும் உயிரியியல் காரணிகள் 50 சத மானியத்தில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் பெற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

2024-25 ம் ஆண்டிற்கு வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மூலம் நுண்ணீர் பாசனஅமைப்பு நிறுவிட 450 எக்டர் பரப்பளவிற்கு இலக்கு பெறப்பட்டு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை நுண்ணீர் பாசனம் அமைக்க பதிவு செய்யப்பட்ட 185 எக்டரில் 119 எக்டர் பரப்பளவிற்கு பணி ஆணை வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

2024-25-ம் ஆண்டில் தோட்டக்கலைத்துறைக்கு 800 எக்டர் பரப்பளவில் ரூ.500 இலட்சத்திற்கு நுண்ணீர்ப் பாசன இலக்கு பெறப்பட்டுள்ளது. 262.57 எக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசனம் அமைக்க 235 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இத்திட்டத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க சிறு/குறு விவசாயிகளுக்கு 100% மானியமும் ஏனையோருக்கு 75% மானியமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி விண்ணப்பித்து பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 19.08.2024 வரை ரூ.18.52 கோடிக்கு1080 விவசாயிகளுக்கு விவசாய பயிர் கடனாக கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 785சிறு/குறு விவசாயிகளுக்கு ரூ.13.90 கோடி விவசாய பயிர் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், இணை இயக்குநர் (பொ) (வேளாண்மை) அல்லி ராணி, மண்டல இணைப் பதிவாளர் (கூட்டுறவுச் சங்கங்கள்) முரளிகண்ணன், மேலாண்மை இயக்குநர் (மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி) நடுக்காட்டு ராஜா, துணை ஆட்சியர்(பயிற்சி) சத்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) சௌ.மனோரஞ்சிதம் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் 
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad