மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டியில்லா ‘தொழில் கடன்” விழிப்புணர்வு முகாம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 16 August 2024

மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டியில்லா ‘தொழில் கடன்” விழிப்புணர்வு முகாம்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டியில்லா ‘தொழில் கடன்” விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக சங்குக் கூட்டரங்கில் இன்று(16.08.2024) மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டியில்லா ‘தொழில் கடன்” விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், சமூகத்தில் ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளும் சுயமரியாதையுடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ வேண்டுமென்ற உயர்ந்த நோக்கில் மாற்றுத்திறனாளிகளுக்கென பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தப்படுவது மட்டுமல்லாமல் நலத்திட்டங்கள் அவர்களை சென்றடைவதை உறுதிசெய்யும் விதமாக கண்காணிக்கப்படுகிறது. 

மேலும், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய்த்துறை, மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலமாக நலத்திட்ட உதவிகள், வங்கிக்கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலமாக மாற்றுத்திறனாளிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக வட்டியில்லா ‘தொழில் கடன்” விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 27 கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக மாற்றுத்திறனாளிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் 311 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.140.34 இலட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ 500.00 இலட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 31.07.2024 வரை 101 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50.00 இலட்சம் வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. இக்கடன்கள் சிறுவணிகம், தொழில் அபிவிருத்தி, சுயதொழில் மற்றும் கைத்தொழில் செய்வதற்காக வழங்கப்படுகிறது. மேலும், இக்கடனுக்கான மாதாந்திர தவணைத் தொகையினை தவணைத் தேதிக்குள் திரும்ப செலுத்தும்பட்சத்தில் வட்டி கிடையாது.

அதன்படி, இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டியில்லா ‘தொழில் கடன்” விழிப்புணர்வு முகாமில் கறவைமாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, பெட்டிக் கடை, பலசரக்குக் கடை, ஆவின் பாலகம், ஜெராக்ஸ் கடை, ஜவுளிக் கடை, உணவகம் உள்ளிட்ட சிறுவணிகம், தொழில் அபிவிருத்தி, சுயதொழில் மற்றும் கைத்தொழில் தொடங்குவது தொடர்பாக 104 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் மீது 30 தினங்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இம்முகாமில், மேலாண்மை இயக்குநர் (மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி) நடுக்காட்டுராஜா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad