தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டின் உள்ளே புகுந்து தங்க நகைகளை திருடிய எதிரிகள் கைது - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 6 June 2024

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டின் உள்ளே புகுந்து தங்க நகைகளை திருடிய எதிரிகள் கைது

 


தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டின் உள்ளே புகுந்து தங்க நகைகளை திருடிய எதிரிகள் கைது - ரூபாய் 2,50,000/- மதிப்புள்ள 67 கிராம் தங்க நகைகள் மீட்பு - எதிரிகளை உடனடியாக கைது செய்து தங்க நகைகளை மீட்ட போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டு.



தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படுக்கப்பத்து அழகம்மன்புரம் பகுதியைச் சேர்ந்த இசக்கி மகன் இசக்கிராஜா (59) என்பவர் கடந்த 02.06.2024 அன்று காலை தனது மனைவியுடன் நாசரேத்தில் ஒரு சுப நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டில் இருந்த இசக்கிராஜாவின் தந்தை இசக்கி வீட்டைப் பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் அன்று மதியம் திரும்பி வந்து பார்த்தபோது மர்மநபர்கள் வீட்டில் உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 69 கிராம் தங்க நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.


இதுகுறித்து இசக்கிராஜா அளித்த புகாரின் பேரில் தட்டார்மடம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுவந்தனர்.


இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கென்னடி மேற்பார்வையில் தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. அனிதா மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. டேவிட் தலைமையிலான சாத்தான்குளம்  உட்கோட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தட்டார்மடம் காந்திபுரி வடக்கு தெருவை சேர்ந்த சித்திரைவேல் மகன் ஆனந்த் (33), தாண்டவன்காடு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மகன் ராஜன் (22) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகியோர் சேர்ந்து மேற்படி இசக்கிராஜாவின் வீட்டிற்குள் புகுந்து தங்க நகைகளை திருடியது தெரியவந்தது.


உடனே மேற்படி தனிப்படை போலீசார் எதிரிகளான ஆனந்த் மற்றும் ராஜன் ஆகிய இருவரையும் உடனடியாக கைது செய்தும், மேற்படி இளஞ்சிறாரை கையகப்படுத்தி திருநெல்வேலி அரசினர் கூர்நோக்கு இல்லத்திலும் ஒப்படைத்தனர். மேற்படி கைது செய்யப்பட்ட எதிரிகளிடமிருந்து ரூபாய் 2,50,000/- மதிப்பிலான 67 கிராம் தங்க நகைகளையும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து தட்டார்மடம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேற்படி திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை உடனடியாக கைது செய்து தங்க நகைகளை மீட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.


  தமிழக குரல் செய்தி களுக்காக
MT. அந்தோணி ராஜா.
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad