திருச்செந்தூர் முருகன் கோவிலில் இந்த ஆண்டு நடைபெற உள்ள கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ரூ.100 ஆக இருந்த விஸ்வரூப தரிசன கட்டணம் ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சாதாரண நாளில் ரூ.500 ஆகவும், விஷேச நாளில் ரூ.2,000 ஆகவும் இருந்த அபிஷேக தரிசன கட்டணம் ரூ.3,000ஆகவும், சிறப்பு தரிசன கட்டணம் ரூ.100லிருந்து ரூ.1000 ஆகவும் திடீரென இன்று கட்டணத்தை உயர்த்தியுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தரிசன கட்டண விகிதத்தை உயர்த்தும் திருக்கோவில் நிர்வாகம் பக்தர்கள் வசதிக்காக கோவில் கடற்கரை பேருந்து நிலையத்திற்குள் செல்லும் அரசு பேருந்துகளுக்கும் 5 ரூபாய் நூழைவு கட்டணத்தில் இருந்து 50 ரூபாய் என உயர்த்தி உள்ளது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக திருச்செந்தூர் கோவில் கடற்கரை பேருந்து நிலையத்திற்குள் அரசு பேருந்துகள் செல்வதில்லை. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து கோவிலுக்கு நடந்து செல்கின்றனர்.
திருச்செந்தூர் தொகுதியை சுற்றி இத்தனை பிரச்சனைகள் இருக்க ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இதனை கண்டுகொள்ளவில்லை என பக்தர்கள், பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இவ்விசயத்தில் அமைச்சர் உடனடியாக தலையிட பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் உடனடியாக பக்தர்கள் வசதிக்காக அரசு பேருந்துகளை திருச்செந்தூர் கோவில் கடற்கரை பேருந்து நிலையத்திற்குள் கட்டணம் இல்லாது அனுமதிக்க வேண்டும்.
இல்லையெனில் ஆந்திர மாநிலம் திருப்பதி கோயில்களில் இருப்பது போல திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து கட்டணம் இன்றி கோவிலுக்கு செல்ல வாகன வசதி அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment