தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில் கடந்த 1923-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்து நாடார் நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா கொண்டாட சென்ற முன்னாள் மாணவர்கள் பள்ளியின் தற்போதைய நிலையை கண்டு அவர்களே அப்பள்ளியை தத்தெடுத்து இலட்சக்கணக்கில் செலவிட்டு கலை இழந்த பள்ளியை கலர்ஃபுல்லாக மாற்றி பள்ளியின் நூற்றாண்டு விழாவை, திருவிழா போல் மிகவும் கோலாகலமாக கொண்டாடி அசத்தியுள்ளனர்.
இதில் 70's, 80's தொடங்கி 2k மாணவர்கள் வரை வயது வித்தியாசமின்றி பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களிலிருந்தும் வந்து கலந்து கொண்டு சிறப்பித்ததுதான் இப்பகுதியில் அனைவரின் கவனத்தையும் இப்பள்ளியின் பக்கம் திரும்பியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில், இயங்கி வரும் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி கடந்த 1923-ஆம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது வரை கல்வித்தரம் சற்றும் குறையாமல் மிகச்சிறப்பாக இயங்கி வருகிறது. இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், 100 ஆண்டுகள் கடந்த தங்களது பள்ளியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்காக திட்டமிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு நேரில் சென்றுள்ளனர்.
ஆனால் அங்கு சென்ற முன்னாள் மாணவர்களுக்கு தாங்கள் படித்த பள்ளியின் கட்டிட மற்றும் அடிப்படை வசதிகளின் நிலையைக் கண்டு பெரும் மனச்சோர்வும், வருத்தமும் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளியின் அடிப்படையை வசதிகளை கட்டமைத்தும், பள்ளிக்கும், அங்கு பயலும் மாணவர்களுக்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று முடிவு செய்து... இதுவரை இப்பள்ளியில் பயின்ற அனைத்து மாணவர்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தங்களுக்குள்ளாக வாட்ஸ்அப் குழுவினை உருவாக்கி அனைவரும் ஒன்றினைந்து
தாங்கள் படித்த பள்ளியை தத்தெடுத்து லட்சக்கணக்கில் நிதியை வழங்கி தற்போது இப்பள்ளியில் சேதமடைந்திருந்த கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாக கலையின்றி காணப்பட்ட பள்ளி கட்டிடங்கள் முழுவதற்கும் பெயிண்ட் செய்து கலர்ஃபுல்லாக மாற்றியுள்ளனர் இந்த முன்னாள் மாணவர்கள்.
அதுமட்டுமின்றி இப்பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறை, குடிநீர் வசதி, மைதானம், சுற்றுச்சுவர் கட்டிடம், முகப்பு வாயில் என அனைத்தையும் பிரம்மாண்டமாக உருவாக்கி நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாக கொண்டாடி அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகின்றனர் இப்பள்ளி முன்னாள் மாணவர்கள்....
பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக சென்ற நூற்றுக்கணக்கான முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிக்கு கல்விச்சீர் கொண்டு வந்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கினர். இதைத்தொடர்ந்து முன்னாள் மாணவர்களின் ஒத்துழைப்பால் கலர்புல்லாக மாற்றப்பட்ட பள்ளி கட்டிடங்களை ரிப்பன் வெட்டி மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். பின்னர் பல ஆண்டுகளுக்குப்பின் சந்தித்த தங்களது பள்ளிப்பருவ நண்பர்களிடம் மனமகிழ்ச்சியோடு தங்களது பழைய பள்ளி அனுபவங்களை பேசி, குடும்பத்தினரை அறிமுகப்படுத்தி ஆனந்தமுற்றனர். இதில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மலேசியா உட்பட பல நாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்து வரும் இப்பள்ளி முன்னாள் மாணவர்கள் பெரும் ஆவலுடன் விழாவில் கலந்து கொண்டு தாங்கள் படித்த பள்ளியை பார்வையிட்டு அனைவரிடமும் மன மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இதையடுத்து ஆயிரக்கணக்கான முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்ட பள்ளியின் நூற்றாண்டு விழாவில், வகைவகையான பொறியல்கள், அப்பளம், வடை, பாயாசம்
என மணக்கமணக்க நடைபெற்ற அறுசுவை விருந்தில் அனைவரும் ஒன்றாக கூடி அமர்ந்து ஒருவருக்கொருவர் உணவுடன் அன்பையும் பரிமாறிக் கொண்டனர்.
மதிய விருந்தைத்தொடர்ந்து விழாவின் தொடர்ச்சியாக பள்ளியில் பரதநாட்டியம், கரகாட்டம், மயிலாட்டம், பொம்மலாட்டம், காவடியாட்டம் என பல்வேறு நாட்டுப்புற நடனங்கள் தொடங்கி ட்ரெண்ட்டிங் டான்ஸ் வரை அனைத்தையும் ஆடி அங்கிருந்த ஒட்டுமொத்த முன்னாள் மாணவர்கள் மற்றும் பார்வையாளர்களையும் கண்ணிமைக்காமல் கண்டு ரசிக்க வைத்தனர் இப்பள்ளி 2k மாணவர்கள்.
அடுத்தபடியாக முன்னாள் மாணவர்களின் பெரும் முயற்சியால் கோலாகலமாக நடைபெற்ற இந்த பள்ளி நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இவ்விழாவில் 1970-ம் ஆண்டு முதல் தற்போது பயின்று வரும் மாணவர்கள் வரை என வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு கொண்டாடி மகிழ்ந்ததுதான் நூற்றாண்டு விழாவின் தனிச்சிறப்பாகவே அனைவரிடமும் சென்றடைந்தது.
இறுதியாக விழாவில் கலந்து கொண்ட அனைவரும் பள்ளியை விட்டு பிரிய மனமின்றி பிரியாவிடை பெற்றுச்சென்றனர்.
No comments:
Post a Comment