

தாமிரபரணி ஆற்றில் உள்ள செங்கல் சூளை, ஆலை, பன்றி குடியிருப்பு குடில், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், உள்ளாட்சி நிர்வாகத்தினர் ஆற்றுக்குள் சாக்கடை கலப்பதை நிறுத்த வேண்டும், குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொடுப்பது கட்டுப்படுத்த வேண்டும், மணல் கொள்ளையை தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும், 2010ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட படி தாமிரபரணி பாயும் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் சார்பில் தாமிரபரணி ஆற்றுக்குள் இறங்கி, தமிழர் மரபுப்படி பிடி மணல் எடுத்து, அதை ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து, அலுவலகம் முன்பு நின்று தாமிரபரணி பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
பொதுச் செயலாளர் இதழாளர் அய்கோ தலைமையில் இயக்க கருத்தாளர்கள் வியனரசு, காஜா முகைதீன், அபூபக்கர் சித்திக், முகமது யாசின் (எஸ்டிபிஐ), வள்ளிநாயகம் (பாட்டாளி மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர்), ஆத்திப் பாண்டி (மாவட்ட தேமுதிக பொருளாளர்), பேராசிரியை பாத்திமா பாபு, கிருஷ்ணமூர்த்தி (ஸ்டெர்லைட் எதிர்ப்பியக்கம்), பீட்டர், விளாத்திகுளம் காளிதாஸ், மணிமாறன் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர், நெகேமியா, உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெண்கள் கைக்குழந்தைகளுடன் வந்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன், திருச்செந்தூர் டிஎஸ்பி ஆகியோர் தலைமையில் ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய போலீஸ் படை பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் பாதுகாப்பு இயக்கத்தினர் வழக்கமான கட்டுப்பாட்டின் படி அமைதியாக ஆற்றுக்குள் இறங்கி பிடி மணல் எடுத்த பின்பு, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வந்து கோரிக்கைகளை முழக்கமிட்டு, தாமிரபரணி பாதுகாப்பு உறுதிமொழி எடுத்தனர். பின்னர் வட்டாட்சியர் சிவகுமாரிடம் தங்கள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
No comments:
Post a Comment