தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மற்றொரு அர்ச்சகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் முதல் சந்தி குறுக்கு தெருவை சேர்ந்த ஹரிஹரன் மகன் சங்கரசுப்பிரமணியன் (23). திருச்செந்தூர் நந்தகுமாரபுரதத்தை சேர்ந்த முத்து மகன் சீதாராமன் (33). இருவரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அர்ச்சகர்களாக பணியாற்றி வருகின்றனர். சம்பவத்தன்று சங்கரசுப்பிரமணியன் தனக்கு வேண்டிய பக்தர்களை கோவிலுக்குள் அழைத்து சென்றுள்ளார். அப்போது சீதாராமனும் அவருக்கு தெரிந்த பக்தர்களை கோவிலுக்குள் அழைத்து வந்துள்ளார்.
அப்போது சீதாராமன் நான் உள்துறை கண்காணிப்பாளரின் அனுமதியுடன் பக்தர்களை அழைத்து செல்கிறேன். நீ உன் கட்டளைதாரர்களை என்னுடன் எப்படி அழைத்து வருவது என்று சங்கர சுப்பிரமணியனிடம் கூறி தகராறு செய்துள்ளார். சங்கரசுப்பிரமணியன் நானும் உள்துறை அதிகாரிகளிடம் கேட்டுதான் அழைத்து வந்தேன் என்று கூறினார்.
இதில் கோவிலுக்குள் வைத்து சங்கர சுப்பிரமணியனை சீதாராமன் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சங்கரசுப்பிரமணியன் கொடுத்த புகாரின்பேரில் திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment