தூத்துக்குடியின் புதிய அடையாளம்.. மாற்றியமைக்கப்பட்ட மேலூர் ரயில் நிலையம் முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வருமா? - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 26 May 2023

தூத்துக்குடியின் புதிய அடையாளம்.. மாற்றியமைக்கப்பட்ட மேலூர் ரயில் நிலையம் முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வருமா?


தூத்துக்குடி புதிய மேலூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க மாண்புமிகு எம்.பி. கனிமொழி அவர்களுக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை. 

தூத்துக்குடி மாநகரின் புதிய அடையாளமாகவும் நகரின் உள்கட்டமைப்பில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய மாற்றமாகவும் அமைந்துள்ளது தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம். இந்த புதிய ரயில் நிலையமானது 27-05-2023 சனிக்கிழமை முதல் செயல்படவுள்ளது எனவும் சென்னை-தூத்துக்குடி மார்க்கத்தில் வரும் முத்துநகர் விரைவு ரயில் மற்றும் ஆறு பாசஞ்சர் ரயில்கள் ஆகிய 7 ரயில்கள் மட்டும் இந்த புதிய ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பழைய மேலூர் ரயில் நிலையத்தால் பெரும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித்தவித்த பொதுமக்களுக்கு இந்த புதிய மேலூர் ரயில் நிலையம் அமைக்கப்பட்டிருப்பது ஒரு வரப்பிரசாதம் ஆகும். 


ஆனால் இந்த புதிய மேலூர் ரயில் நிலையத்தால் தூத்துக்குடி மாநகராட்சி மட்டுமின்றி சுற்றியிருக்கும் முப்பதிற்கும் மேற்பட்ட ஊரக பகுதிகளில் உள்ள சுமார் 3லட்சம் பொதுமக்களுக்கு முழுமையாக பயன்பட வேண்டுமென்றால் தூத்துக்குடியிலிருந்து இயக்கப்படும் தூத்துக்குடி- சென்னை முத்துநகர் விரைவு ரயில், தூத்துக்குடி -மைசூரு விரைவு ரயில், தூத்துக்குடி-நெல்லை பாசஞ்சர் ரயில், மணியாச்சி-தூத்துக்குடி பாசஞ்சர் ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களின் புறப்பாடு மற்றும் வருகை ஆகிய இரு மார்க்கங்களிலும் தூத்துக்குடி புதிய மேலூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வசதி ஏற்படுத்தி தரவேண்டும். பழைய மேலூர் ரயில் நிலையம் மாற்றப்படுவதற்கு முன்பு வரை தூத்துக்குடி மைசூரூ விரைவு ரயில் இரு மார்க்கங்களிலும் மேலூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வசதி இருந்தது.  ஆனால் இந்த புதிய மேலூர் ரயில் நிலையத்தில் தூத்துக்குடி மைசூரு விரைவு ரயில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 


பொதுமக்களை பொறுத்தமட்டில் அதிக அளவு லக்கேஜ் வைத்திருப்பவர்கள், குடும்பமாக பயணிப்பவர்கள், காரில் வருபவர்கள் என அனைவருமே கீழூர் பிரதான ரயில் நிலையத்திற்கு வந்து விடுவார்கள். ஆனால் குறைந்த லக்கேஜ் வைத்திருப்பவர்கள், தனியாளாக பயணிப்பவர்கள் எல்லோரும் ஏன் கீழூர் பிரதான ரயில் நிலையத்திற்கு வரவேண்டும். அவர்கள் எல்லோருமே புதிய மேலூர் ரயில் நிலையத்தில் ஏறிக் கொள்ளலாமே... இதனால் கீழூர் ரயில் நிலையப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது. 


உதாரணமாக தூத்துக்குடி சுற்றுவட்டார ஊரகப்பகுதி மக்கள் ரயில் பயணம் மேற்கொள்வது என்றால் அவர்களால் மிக எளிதாக பேருந்து வசதிகள் மூலம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து விடுவார்கள். அப்படி வருபவர்கள் ரயில் ஏறவேண்டும்  என்றால் ஆட்டோ பிடித்துதான் கீழூர் ரயில் நிலையம் செல்ல இயலும். இதுவே முத்துநகர் விரைவு ரயில் மற்றும் மைசூரு விரைவு ரயில் புதிய மேலூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வசதி இருந்தால் மிக எளிதாக மேலூர் ரயில் நிலையத்திலேயே ரயில் ஏறிக் கொள்ளலாம். எனவே தூத்துக்குடியிலிருந்து இயக்கப்படும் அனைத்து ரயில்களின் புறப்பாடு மற்றும் வருகை ஆகிய இரு மார்க்கங்களிலும் புதிய மேலூர் ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு ரயில்வே  நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். 


மேலும் இந்த பிரச்சினை குறித்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு. கனிமொழி அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்கள் ரயில்வே நிர்வாகத்திடம் கலந்தாலோசித்து இதற்கு ஒரு நல்ல தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad