திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் லட்ச கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்! விண்ணை முழக்க அரோகரா கோஷத்துடன் பக்தர்கள்!! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 31 October 2022

திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் லட்ச கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்! விண்ணை முழக்க அரோகரா கோஷத்துடன் பக்தர்கள்!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் லட்சக கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடந்தது கந்தசஷ்டி திருவிழா.இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் 5 நாட்கள் காலை மற்றும் மாலையில் யாக சாலை பூஜைகள் நடந்தன. விழா நாட்களில் தினமும் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்பாளுடன் வெள்ளி சப்பரத்தில் சண்முகவிசால மண்டபத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் அபிஷேகம் நடந்தது. 

கந்தசஷ்டி திருவிழாவின் 6-ம் நாள் அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் நடந்த தீபாராதனைக்கு பின்னர், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் வெள்ளி சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் திருவாவடுதுறை ஆதீனம் கந்த சஷ்டி மண்டபத்தில் சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. 


ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீவரர் கோவிலில் இருந்து சூரபத்மன் தனது படை வீரர்களுடன் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மாலை 3.15மணிக்கு கோவில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தார். மாலை 3.55மணிக்கு, சுவாமி ஜெயந்திநாதர் அலங்காரத்துடன் கையில் வேல் ஏந்தி, சூரபத்மனை வதம் செய்ய கடற்கரைக்கு புறப்பட்டார். 


முதலில் யானைமுகன் தனது பரிவாரங்களுடன், முருக பெருமானை நோக்கி போர் புரிய சுற்றி வந்து சுவாமிக்கு எதிரே வந்து நின்றான். மாலை 4.30 மணிக்கு யானை முகம் கொண்ட தாரகாசூரனை, முருகப்பெருமான் வேல் கொண்டு வதம் செய்தார். பின்னர் சிங்கமுகாசூரன், அதேபோல் முருகனை வலம், இடமாக சுற்றி வந்து நேருக்கு நேர் போரிட தயாரானான். அவனையும் முருகப்பெருமான் தன் வேலால் வதம் செய்தார். தொடர்ந்து சூரபத்மன் வேகமாக முருக பெருமானுடன் போர் புரிய வந்தான். முருகக் கடவுள் வேல் எடுத்து சூரபத்மனை சம்ஹாரம் செய்தார். இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை முருகப்பெருமான் சேவலும், மயிலுமாக மாற்றி ஆட்கொண்டார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் வைத்துக் கொண்டார். 

பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் உள்ள சந்தோஷ மண்டபத்திற்கு சென்றார். அங்கு சினம் தணிந்த முருகனுக்கும், வள்ளி-தெய்வானை அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி கிரி வீதி வலம் வந்து கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகா தேவர் சன்னதிக்கு சென்றார். அங்கு சாயாபிஷேகம் நடந்தது. 


பின்னர் விரதம் இருந்த பக்தர்களுக்கு யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட தகடுகள் வழங்கப்பட்டன. சூரசம்ஹாரம் நடந்ததும் பக்தர்கள் கடலில் புனித நீராடி பல மணி நேரம் வரிசையில் காத்துநின்று சாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சூரசம்ஹாரத்தை காண கோவிலுக்கு வந்து இருந்தனர். 


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்பட்டு இருந்தன. இதேபோன்று திருச்செந்தூர்- நெல்லைக்கு சிறப்பு ரெயில் விடப்பட்டு இருந்தது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 


திருவிழாவில் இந்துசமய அறநிலைவியத்துறை சேகர்பாபு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை தம்பிரான், திருச்செந்தூர் கோட்டாட்சியர் புகாரி ,தாசில்தார், மண்டல துணை தாசில்தார் பாலா. யூனியன் சேர்மன் செல்வி வடமலை பாண்டியன் நகராட்சி சேர்மன் சிவ ஆனந்தி துணை சேர்மன் செங்குழி ரமேஷ், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மு.ராமச்சந்திரன், நகர செயலாளர் மகேந்திரன் மா.ஜெ.பேரவை தலைவர் மணிகண்டன் . ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் மு.சுரேஷ்பாபு, உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.


விழாவிற்கான ஏற்பாடுகளை.அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad