திருச்செந்தூரில் கோலாகலமாக தொடங்கியது கந்தசஷ்டி விழா; அதிகாலையிலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்.! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 25 October 2022

திருச்செந்தூரில் கோலாகலமாக தொடங்கியது கந்தசஷ்டி விழா; அதிகாலையிலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்.!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று காலை தொடங்கியது. உலக பிரசித்தி பெற்ற முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கிவரும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாவில் ஒன்றான கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். கந்த சஷ்டி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.


கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக பக்தர்கள் பங்கேற்பின்றி இந்த விழாவானது நடைபெற்றது. அப்போது நடைபெற்ற சூரசம்காரம் நிகழ்ச்சியில் குறைந்த அளவில்  பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்தாண்டு நடைபெறும் கந்தசஷ்டி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதனால் அதற்கான பல விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 


முதல் நாளான இன்று அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலை மண்டபத்திற்கு எழுந்தருளினார். யாகசாலை மண்டபத்தில் மூன்று பிரதான கும்பம் உட்பட 41 கும்பங்கள் வைக்கப்பட்டிருந்தன.தொடர்ந்து சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது.


யாகசாலை பூஜை தொடங்கியதும் பக்தர்கள் பச்சை ஆடை உடுத்தி தங்களது விரதத்தை தொடங்கினார்கள். விரதம் இருக்கும் பக்தர்கள் கோவிலில் அங்கங்கே அமர்ந்து கந்த சஷ்டி கவசம் முருகனின் பாடல்களையும் பாடி விரதம் இருக்க தொடங்கினார்கள். விரதம் இருக்கும் பக்தர்கள் தங்குவதற்கு 18 இடங்களில் தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.


அதனை தொடர்ந்து உச்சிகால அபிஷேகம் மாலை 3 மணிக்கு சாய் ரட்ச தீபாராதனை நடைபெறும். இன்று சூரிய கிரகணம் 5 மணி முதல் 6.15 மணி வரை இருப்பதால் மாலை 4 மணிக்கு சாமிகளுக்கு பட்டு சாத்தப்பட்டு நடை சாத்தப்படும். அதன் பின்னர் 6.45 மணிக்கு நடை திறக்கப்பட்டு தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் ஆறாம் திருநாளானான வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.


பக்தர்களின் பாதுகாப்பு கருதி 2 ஆயிரத்து 700 போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், செந்தில் முருகன், ராமதாஸ், கணேசன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் மாவட்ட நிர்வாகமும், கோவில் பணியாளர்களும் செய்து வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad