கந்த சஷ்டி விழாவில் ஆறு நாள்கள் விரதமிருக்கும் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் - அமைச்சர் சேகர்பாபு தகவல்!. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 21 October 2022

கந்த சஷ்டி விழாவில் ஆறு நாள்கள் விரதமிருக்கும் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் - அமைச்சர் சேகர்பாபு தகவல்!.

கந்த சஷ்டி விழாவில் ஆறு நாள்கள் விரதமிருக்கும் பக்தர்களுக்காக 18 இடங்களில் சுமார் 1 லட்சம் சதுர அடியில் தற்காலிக பந்தல் அமைக்கப்படவுள்ளது அமைச்சர் சேகர்பாபு தகவல். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.


பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அமைச்சர், கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.


தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கந்த சஷ்டி விழாவில் ஆறு நாள்கள் விரதமிருக்கும் பக்தர்களுக்காக 18 இடங்களில் சுமார் 1 லட்சம் சதுர அடியில் தற்காலிக பந்தல் அமைக்கப்படவுள்ளது. 380 கழிப்பிடங்களும், கோயில் வளாகத்தில் 66 இடங்களிலும்;, திருக்கோயில் பிரகாரங்களில் 15 இடங்களில் பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும், 19 இடங்களில் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 


4 இடங்களில் எல்.இ.டி திரைகள் வைக்கப்பட்டு கோயிலில் நடைபெறும் நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்படும். காவல்துறை சார்பில் 31 இடங்களில் கண்காணிப்பு கோபுரம், கடலில் நீராடும் பக்தர்களை பாதுகாக்க 15 கடல் பாதுகாப்பு வீரர்கள் மற்றும் 3 டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு செய்யப்படும். 2700 காவலர்களும், ஊர்க்காவல்படையினரும் பாதுகாப்பு பணியில் பணியமர்த்தப்படுவர். திருக்கோயில் மற்றும் நகராட்சி தூய்மைப்பணியாளர்கள் 650 பேர் சுகாதாரப்பணியில் ஈடுபடுவர். குடிநீர், சுகாதாரம், மருத்துவம் மற்றும் மின்சார வசதிகளை கண்காணிக்க ஒவ்வொரு துறைக்கும் என இணை ஆணையர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.  3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படுகின்றன. எந்தவொரு அசம்பாவிதமும் இன்றி பக்தர்கள் முழுமையான சுவாமி தரிசனம் செய்திட ஏற்ற வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


திருக்கோயிலில் தங்கத்தேரில் சிறு சிறு பணிகள் மேற்கொள்ளவேண்டியுள்ளது. தங்கத்தேர் உலா குறித்து துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தெரிவிக்கப்படும். பக்தர்கள் திருக்கோயில் உள் பிரகாரத்தில்   400 நபர்கள் உள்ளே இரவு, பகலாக தங்குவதால் ஏற்படும் சிறு சிறு சுகாதார கேடுகளால் திருக்கோயில் தூய்மை பாதிக்கப்படுகிறது. மேலும் விரதமிருக்கும் பக்தர்கள் தங்குவதற்காக தரமான முறையில் பந்தல்கள் அமைக்கப்படுகிறது.


தற்போது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். அவர்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாகத்தான் இவ்வாண்டு உள்ளே தங்கிட அனுமதிக்கவில்லை. முதல்வர் தொடங்கி வைத்த ரூ. 300 கோடியிலான பெருந்திட்ட வளாகப்பணியை 3 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறையும், அரசும் செயல்பட்டு வருகிறது. தனியார் நிறுவனம் திருக்கோயிலில் திருப்பணி செய்ய அவர்களுடைய பங்குத்தொகை 200 கோடி. அரசின் சார்பில் இந்து சமயஅறநிலையத்துறையின் பங்குத்தொகை 100 கோடி. மொத்தம் 300 கோடியில் இத்திருப்பணி செய்யப்படுகிறது. 


தனியார் யார் திருப்பணி செய்தாலும், புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு அவர்கள் தான் அந்த திருப்பணியை மேற்கொள்வார்கள். அவர்கள் சொந்தப்பணத்தில் திருப்பணி செய்வதற்கு எங்களுக்கு அரசுக்கு ஏன் கமிஷன் தர வேண்டும். இந்த ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹாரவிழாவில் கார் பாஸ்கள், விஐபி பாஸ்கள் குறைக்கப்பட்டு, ஏழை, எளிய பக்தர்கள் வெகுவாக தரிசனம் பார்க்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.


நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் திருமகள், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் இரா.அருள்முருகன், இணை ஆணையர் (பொ) ம.அன்புமணி, அறங்காவலர்கள் ராமதாஸ், கணேசன், செந்தில்முருகன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் புஹாரி, தாசில்தார் சுவாமிநாதன் திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad