தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூ.1.5 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவு மண்டபம் பணிகளை கனிமொழி எம்பி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூ.150 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் கரிசல் இலக்கியத்தின் தந்தை மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவு மண்டபத்தினை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது, தமிழக அரசு எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய மரியாதையை வழங்கிக்கொண்டு வருகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய எழுத்தாளராக கொண்டாடக்கூடிய கரிசல் இலக்கியத்தின் தந்தை மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களுக்கு தமிழக அரசு செலுத்தக்கூடிய மரியாதையின் வெளிப்பாடுதான் இந்த நினைவு மண்டபம். தமிழ்நாடு முதலமைச்சர் சாகித்ய அகாடமி, மற்ற விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள். தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை ஒவ்வொரு நாளும் அரசு அறிவித்துக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.
ஆய்வில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, விளாத்திகுளம் எம்எல்ஏ ஜி.வி.மார்கண்டேயன் ஆகியோர் முன்னிலையில் கோவில்பட்டி வட்டாட்சியர் சுசிலா, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் (கட்டடம்/பராமரிப்பு) பரமசிவம் மற்றும் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment