பொருநை நாகரிக பகுதியான சிவகளையில் மூன்றாம் கட்ட தொல்லியல் அகழாய்வு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Saturday, 2 April 2022

பொருநை நாகரிக பகுதியான சிவகளையில் மூன்றாம் கட்ட தொல்லியல் அகழாய்வு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

2022033066
தூத்துக்குடி மாவட்டத்தில் பொருநை ஆற்றங்கரை நாகரிக பகுதியான சிவகளையில் மூன்றாம் கட்ட தொல்லியல் அகழாய்வு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கடந்த 30.03.2022 அன்று தொடங்கி வைத்தார்.


பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தாமிரபரணி ஆற்றங்கரையில் பொருநை நாகரிகம் வளர்ந்தது பற்றியும், அதனைச்சார்ந்து தமிழ் சமூகம் எவ்வாறு வளர்ந்தது என்பது பற்றியும் இன்று அனைவராலும் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொருநை ஆற்றங்கரை நாகரிகத்தின் பழமையை பறைசாற்றும் விதமாக தொல்லியல் இடங்களில் கிடைக்கும் அகழாய்வு பொருட்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் விதமாக திருநெல்வேலியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்கள். 


அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. பொருநை நாகரித்தின் முக்கிய இடமாக கருதப்படும் ஆதிச்சநல்லூரில் ஏற்கனவே இந்திய தொல்லியல் துறையினர் அகழாய்வுகள் நடத்தி வருகிறார்கள். தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் கொற்கை, சிவகளை பகுதிகளில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. சிவகளை பகுதியில் 3ம் கட்ட தொல்லியல் அகழாய்வு பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளின் முடிவில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் கிடைக்கும். சிவகளை மற்றும் அருகில் உள்ள பராக்கிரமபாண்டியபுரம், பேரூர், ஆவரங்காடு உள்ளிட்ட பகுதிகள் தொல்லியல் ஆய்விடங்களாக கண்டுபிடித்துள்ளோம். 


இதில் முக்கியமாக பராக்கிரமபாண்டியபுரத்தில் ஹரப்பா, மொஹஞ்சதாரோ, டோலவீரா போன்ற தொல்லியல் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட கழிவுநீர் வடிகால் போன்று இல்லாவிட்டாலும் சுடுமண் வளையங்களால் அமைக்கப்பட்ட கழிவுநீர் வடிகால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வின் மூலம் கிடைக்கும் பழங்கால பொருட்களை கார்பன் சோதனை முறையில் பரிசோதனை செய்து அவற்றின் கால அளவினை கண்டுபிடிக்க முடியும். சிவகளையில் அகழாய்வின் மூலம் கிடைத்த அரிசியினை கார்பன் சோதனை முறையில் 3200 ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரியவந்துள்ளது. 


வளர்ச்சியடைந்த ஹரப்பா நாகரிக காலமான பொ.ஆ.மு. 1900 - 1200க்கும் ஒத்துள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு கிடைக்கக்கூடிய முத்திரைகள், பொருட்கள் ஆகியவை ஹரப்பா, மொஹஞ்சதாரோ நாகரிகங்களுடன் ஒத்துள்ளதா எனவும் ஆய்வுகள் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள பொருநை நாகரிக பகுதிகளான சிவகளை, வசவப்பபுரம், ஆவரங்காடு, பேரூர் திரடு, ஆதிச்சநல்லூர், கொற்கை ஆகிய பகுதிகளில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ள பகுதி மற்றும் குடியிருப்பு பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அகழாய்வுகள் மேற்கொள்ளும்போது, நமது மூதாதையர்களின் வாழ்க்கை முறை, எழுத்து முறை, வணிகம், வேளாண்மை முறைகள் பற்றி கண்டறிய முடியும். சிவகளையில் ஏற்கனவே 1, 2ம் கட்ட அகழாய்வு பணிகள் 2 ஆண்டுகள் நடைபெற்றது. 


தற்போது 3வது கட்ட அகழாய்வு பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 6 மாதங்களில் முடிக்கப்படும் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் மாவட்ட நிர்வாகம் மூலம் 6.22 ஹெக்டேர் நிலம் அகழாய்வு பணிகளுக்காக தொல்லியம் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிவகளை பகுதியில் கடந்த முறை ஆய்வு செய்த மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் மற்றும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆகியோரிடம், பொதுமக்கள் இங்கு கிடைக்கும் அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்தி திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்கள். 


அதன்படி, அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அருங்காட்சியகம் திருநெல்வேலியில் அமைக்கப்படும் பொருநை அருங்காட்சியகத்துடன் இணைந்ததாக இருக்கும். பொதுமக்கள் நேரடியாக இங்கு வந்து பார்ப்பதற்கு சாலை வசதிகள் மற்றும் அகழாய்வுகள் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்கு தொல்லியல் துறை மூலம் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.


நிகழ்ச்சியில் சிவகளை அகழாய்வு இயக்குநர் திரு.பிரபாகரன், இணை இயக்குநர் திரு.விக்டர்ஞானராஜ், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.புஹாரி, ஏரல் வட்டாட்சியர் திரு.கண்ணன், சிவகளை ஊராட்சிமன்ற தலைவர் திருமதி.பிரதீபா, ஏரல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.அன்றோ, திரு.சுரேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad