மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் லோக.பாலாஜி சரவணன் அவர்கள் முன்னிலை வகித்தார்.பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பினை வலியுறுத்தி ஒவ்வொரு மாதமும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 2 மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து தலைக்கவசங்கள் வழங்கினோம்.
கடந்த மாதம் நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த மாதம் கார், பேருந்து என அனைத்து ஓட்டுநர்களுக்கும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழகத்திலேயே சாலை பாதுகாப்பில் சிறந்த மாவட்டமாக 2020ம் ஆண்டு தேர்ந்தெடுத்துள்ளார்கள். காவல் துறையினர், வருவாய் துறையினர், உள்ளாட்சி துறையினர் இணைந்து செயல்பட்டதுதான் இதற்கு காரணமாகும். முக்கியமாக நமது மாவட்ட ஓட்டுநர்களின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வும் காரணமாகும். தூத்துக்குடி மாவட்டத்தை 2021, 2022ம் ஆண்டுகளிலும் சாலை பாதுகாப்பில் தமிழகத்திலேயே முதல் மாவட்டம் என்ற இடத்தினை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். ஓட்டுநர்களின் பணி சிறப்பானதாகும்.
நான் முதன்முதலாக திருநெல்வேலி மருத்துவக்கல்லூரிக்கு செல்வதற்காக சென்றபோது எனக்கு வழிகாட்டியது ஒரு பேரூந்து ஓட்டுநர்தான். அவர் இன்றும் எனது நினைவில் உள்ளார். அதுபோல் டெல்லியில் யு.பி.எஸ்.சி. ஆணையத்திற்கு செல்வதற்கும் எனக்கு ஒரு ஆட்டோ ஓட்டுநர்தான் வழிகாட்டினார். ஓட்டுநர்கள் என்று சொல்வதைவிட அவர்களை முகவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
உலக அளவில் சாலை விபத்துகளில் அதிக அளவில் இறக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் காசநோய், எச்.ஐ.வி. ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு போன்ற நோய்களால் அதிக அளவில் இறக்கவில்லை. சாலை விபத்தினால்தான் அதிக அளவில் இறக்கின்றனர். நமது மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 300ல் இருந்து 350 பேர் வரை சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். காசநோயினால் 10 பேர் மட்டும்தான் இறக்கின்றனர். அந்த அளவிற்கு மருத்துவ வசதிகள் முன்னேற்றம் அடைந்துள்ளது. அவர்கள் தொடர்ந்து மாதம்தோறும் மருந்துகள் சாப்பிட்டு வருகின்றனர். எச்.ஐ.வி. நோயினால் யாரும் இறக்கவில்லை.
கொரோனா தொற்றினால் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 320 பேர்தான் இறந்துள்ளனர். அவர்களின் குழந்தைகளுக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் மற்றும் ரூ.3 லட்சம் என உதவித்தொகைள் வழங்கியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் சாலை விபத்தினால் இறப்பு ஏற்படுவதை 2030ம் ஆண்டுக்குள் பூஜ்ஜியமாக குறைக்க வேண்டும் என்ற முன்னேற்பாடு இலக்கினை நாடுகளுக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கினை அடைவதற்கு அதிகமாக செயல்படுவது தமிழ்நாடுதான். மாண்புமிகு ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அவர்கள், தமிழகத்தில் பின்பற்றப்படும் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மற்ற மாநிலங்களிலும் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சாலை பாதுகாப்பு குழு அமைத்து சாலை விபத்துகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்கள்.
சாலை பாதுகாப்பு குழு மூலம் மாவட்டத்தில் விபத்துகள் நடந்த இடங்களில் சாலைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விபத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மாணவ, மாணவிகள் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை தெரிந்துகொள்ள வேண்டும்.
பெற்றோர்கள் தங்களது வீட்டில் உள்ள வாகனங்களை சிறுவர்கள் ஓட்டுவதற்கு அனுமதிக்கக்கூடாது. பள்ளி வாகனங்களை ஆறு மாதத்திற்கு ஒருமுறை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்காணித்து வருகிறார். பள்ளி வாகனங்கள் மூலம் விபத்துகள் ஏற்படாதவாறு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தமிழக அரசு “இன்னுயிர் காக்கும் திட்டம், நம்மை காக்கும் 48” என்ற திட்டத்தினை தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் விபத்துகளில் சிக்கியவர்களை அருகில் உள்ள மருத்துவனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5000 கொடுப்பதற்கு இத்திட்டம் வழிவகை செய்துள்ளது.
மேலும் அவரை விபத்து தொடர்பான வழக்குகளிலும் சேர்க்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி மிதமான வேகத்தில் சென்றால் விபத்துகள் ஏற்படாது. எனவே அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லா மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை மாற்றுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.விநாயகம், சாலைபாதுகாப்பு உறுப்பினர் திரு.எம்பவர் சங்கர், மனநலம் மருத்துவர் சிவசைலம் மற்றும் அலுவலர்கள், ஓட்டுநர்கள் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment