தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் உடன்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (19.11.2024) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு செய்த பணிகளின் விவரங்கள்:-
சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் பன்னம்பாறை ஊராட்சியில் உள்ள குடியிருப்புகளுக்கு ஊராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீரின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், பன்னம்பாறை ஊராட்சி அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டார்.
சாத்தான்குளம் அரசு மருத்துவமனையினை பார்வையிட்டு அங்கு, வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள், செவிலியர்களிடம் கேட்டறிந்து உள் நோயாளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, இரத்த பரிசோதனை ஆய்வகம், எக்ஸ்ரே மையம், மருந்துகளின் இருப்பு குறித்த பதிவேடு மற்றும் பிறப்பு சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சாத்தான்குளத்தில் உள்ள அரசு ஆதிதிராவிட நல மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கான விடுதிகளை பார்வையிட்டு விடுதியின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் அரசூர் ஊராட்சியில் உள்ள குளம் மற்றும் புத்தன்தருவை ஊராட்சியில் உள்ள தருவைக் குளத்தினையும் பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து, அழகப்பபுரம் ஊராட்சி, பெருமாள்புரம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் முருங்கைக்காய் சேமிப்புக் கிட்டங்கியின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, உடன்குடி ஊராட்சி ஒன்றியம் குலசேகரபட்டிணம் ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிட நல மாணவியருக்கான விடுதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி ஆகியவற்றை பார்வையிட்டு, அங்கு தங்கி பயிலும் மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடி விடுதியின் அடிப்படை வசதிகள் மற்றும் அங்குள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இவ்வாய்வின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா உதவி இயக்குநர் ஊராட்சிகள் உலகநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பெனட் ஆசீர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஷ்வரன், வட்டாட்சியர்கள் முருகேஸ்வரி (சாத்தான்குளம்), பாலசுந்தரம் (திருச்செந்தூர்), சாத்தான்குளம் மற்றும் உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment