தமிழகத்தின் 2வது பெரிய விமான நிலையம் ஆகிறது துாத்துக்குடி! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 18 October 2024

தமிழகத்தின் 2வது பெரிய விமான நிலையம் ஆகிறது துாத்துக்குடி!


தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, 3,115 மீட்டர் நீளமும், 45 மீட்டர் அகலமும் உடைய இரண்டாவது பெரிய ஓடுதளம் உள்ள விமான நிலையமாக துாத்துக்குடி மாறுகிறது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, பஸ், ரயில், கப்பல், விமானம் என நான்கு வகை போக்குவரத்து வசதியும் உடைய நகரம் துாத்துக்குடி. பெரிய தொழிற்சாலைகள், துறைமுகம் என, வளர்ந்து வரும் நகரமாக துாத்துக்குடி விளங்குகிறது. 'பர்னிச்சர் பார்க், வின் பாஸ்ட் எலக்ட்ரிக் கார்' உற்பத்தி ஆலை, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் என, அடுத்தடுத்து புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

வெளிநாடு மற்றும் வெளி மாநில மக்களின் வசதிக்காக, துாத்துக்குடி விமான நிலையம் தற்போது விரிவாக்கம் செய்யப்படுகிறது. துாத்துக்குடி - சென்னை இடையே, தினமும் ஐந்து முறையும், துாத்துக்குடி - பெங்களூரு இடையே தினமும் இரண்டு முறையும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், கூடுதல் விமானங்களை கையாளும் வகையில், 227.33 கோடி ரூபாய் மதிப்பில் புதிய முனையம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. 17,341 சதுர மீட்டரில் அமைக்கப்படும் புதிய முனையத்தில், விமான போக்குவரத்து கண்காணிப்பு, கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் அதை சார்ந்த அலுவலக கட்ட டங்கள், தீயணைப்பு துறை கட்டடங்கள் உள்ளிட்டவை கட்டப்படுகின்றன.

துாத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விமான நிலையத்தின் புதிய முனையத்திற்கு செல்லும் வகையில், 1 கி.மீ.,க்கு இணைப்பு சாலை புனரமைக்கும் பணியும் நடக்கிறது. புதிய முனையத்தின் புறப்பாடு பகுதியில் நான்கு வாயில்களும், 21 பயணியர், 'செக் இன் கவுன்டர்'களும், மூன்று 'ஏரோ பிரிட்ஜ்'களும், இரண்டு வருகைக்கான, 'கன்வேயர் பெல்ட்'களும் அமைக்கப்படுகின்றன

மேலும், ஒரே நேரத்தில் ஐந்து விமானங்களை நிறுத்தும் வகையிலான வசதிகள், 500 பயணியர் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள், இரண்டு வி.ஐ.பி., அறைகள், 'லிப்ட்' வசதிகள், பயணியர் அதிகமாக வருகை தரும் நேரங்களில், ஒரு மணி நேரத்திற்கு, 1,440 பயணியரை கையாளும் வகையிலான வசதிகள் என, அதிநவீன வசதிகளுடன் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.

புதிய முனையம் நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற பசுமை கட்டடமாக அமைக்கப்படுகிறது. முனைய கட்டடங்கள் முழுதும் சூரியசக்தி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது வரை 76 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, அக்டோபர் மாதத்திற்குள் செயல்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய முனையத்தில், 113.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 3,115 மீட்டர் நீளத்திற்கு விமான ஓடுதளம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதனால், மிகப்பெரிய ஏ - 321 ரக ஏர்பஸ் விமானங்களும் வந்து செல்ல முடியும். ஓடுதளம் அமைக்கும் பணி, இம்மாத இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, விமான நிலைய உயர் அதிகாரிகள் கூறியதாவது: விமான நிலைய விரிவாக்க பணிகள் முடிவடைந்ததும், சென்னை, பெங்களூருக்கு மட்டுமின்றி, ஹைதராபாத், மும்பை, திருவனந்தபுரம் உள்ளிட்ட, நாட்டின் பெரிய நகரங்களுக்கும் விமான சேவை துவங்கப்படும். தற்போது, 78 பயணியர் வரை செல்லும் ஏ.டி.ஆர்., ரக விமானங்கள் தான் இயக்கப்படுகின்றன.

இனி, 250 பயணியருடன் செல்லும், 'ஏ321' ரக ஏர்பஸ் விமானங்களும் இயக்கப்படும். சென்னை விமான நிலைய ஓடுதளத்தின் நீளம் 3,611 மீட்டர். அதற்கு அடுத்தபடியாக, 3,115 மீட்டர் நீளமும், 45 மீட்டர் அகலமும் உடைய இரண்டாவது பெரிய ஓடுதளம் உள்ள விமான நிலையமாக துாத்துக்குடி மாறுகிறது. இதன் மூலம் துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணியர் பயன் பெறுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்

No comments:

Post a Comment

Post Top Ad