பாதாள சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையத்தை அகற்றக் கோரி திருச்செந்தூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம்.
திருச்செந்தூரில் சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியும் இன்றளவும் பாதாள சாக்கடை திட்டம் முழுமை அடையாமல் உள்ளது. இதில் வீடுகளில் இருந்தும், விடுதி உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் இருந்தும் வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பதற்காக தோப்பூா் அருகே சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.
இந்த சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து அசுத்தமான வாயு மற்றும் துா்நாற்றம் வீசும் வாயு வெளியேறுவதால் சுத்திகரிப்பு நிலையத்தை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கோரி, தோப்பூா் பொதுமக்கள் நேற்று திங்கள்கிழமை காலை திருச்செந்தூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
போராட்டத்தில் தோப்பூா் ஊா் தலைவா் அய்யாக்குட்டி, செயலாளா் முனீஸ்வரன், பொருளாளா் சரண்ராஜ், ஊா் பிரமுகா்கள் தமிழ்செல்வன், மணிவண்ணன், தனசேகரன், மனோகரன், கவுன்சிலா் சாந்தி உள்ளிட்ட அரசியல் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா். புதை சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையத்தை அகற்றக் கோரி, நகராட்சி ஆணையா் கண்மணியிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் திருச்செந்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் பாலசுந்தரம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி பாதாள சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையத்தை சுற்றுச்சூழல், குடிநீா் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்வாா்கள்.
அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் உறுதியளித்தாா். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனா்.
No comments:
Post a Comment