தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூhயில் இன்று (27.09.2024), தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2022-2023 மற்றும் 2023-2024-ம் கல்வி ஆண்டுகளில் 12-ஆம் வகுப்பு பயின்று பள்ளி இறுதி தேர்வு எழுதாதவர்கள், தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள்;, தேர்வில் வெற்றி பெற்று உயர்கல்வி பெற கல்லூரிகளில் சேராதவர்கள் மற்றும் 8 முதல் 12-ஆம் வகுப்பில் பயிலும் போது இடைநின்ற மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட ‘உயர்வுக்குப் படி” வழிகாட்டல் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.
இம்முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் போது தெரிவித்ததாவது:-
உயர்வுக்குப் படி நிகழ்ச்சியினுடைய இரண்டாவது கட்டத்தினுடைய மூன்றாவது நிகழ்வாக திருச்செந்தூர் கோட்டத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. உயர்வுக்குப் படி நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு பள்ளியிலும் பயின்ற மாணவர்கள் யார்யார், அவர்கள் என்னென்ன பயின்றிருக்கிறார்கள் என்பதை முழுமையாக ஆய்வு செய்து அவர்களில் யாரெல்லாம் உயர்கல்விக்கு சேர வில்லையோ அவர்கள் ஒவ்வொருடைய வீடுகளுக்கும் சென்று அவர்களின் உயர்கல்விக்கு உறுதி செய்கின்ற நிகழ்ச்சியாக இதை வடிவமைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய மிக முக்கியமான திட்டமாக ‘நான் முதல்வன் திட்டம்” செயல்படுகிறது.
நமது மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து கல்லூரி பேராசியர்கள் உடனடியாக தங்களது கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக இங்கு வந்துள்ளார்கள். மாணவர்கள் உயர்கல்விக்கு சென்றால் தான் பள்ளியில் பெற்ற கல்வியினை அடுத்தக்கட்டமான, தொழில்திறன் பெற்ற நிலைக்கு கொண்டு செல்ல முடியும். மாணவர்கள் உயர்கல்விக்கு போகாமல் வீட்டில் வேலை செய்கிறேன் என்று சொல்வதும் அல்லது படிக்காமல் வீட்டில் இருப்பேன் என்று சொல்வதும் முற்றிலும் தவறானது. அது அவர்களின் எதிர்காலத்திற்கு எந்த விதத்திலும் உதவி செய்யாது.
உங்கள் குழந்தைகளை உயர்கல்வி படிக்க வைக்காமல் வீட்டு வேலைக்கோ அல்லது பிற வேலைகளுக்கோ அனுப்புவதுவது என்பது அவர்களின் எதிர்கால வாழ்க்கையை முற்றிலும் பாதித்துவிடும். அவர்களின் மூலம் இப்போது கிடைக்கக்கூடிய சின்ன வருமானம் உங்களுக்கு பெரிதாக தெரிந்தாலும் அவர்கள் வாழ்க்கையில் பெரிய தொழில் நிறுவனகளில் தொழில் வாய்ப்புகளையும், வேலை வாய்ப்புகளையும் பெருவதற்கான வாய்ப்பு அவர்கள் உயர்கல்வி படிக்காமல் போனால் கிடைக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நிச்சயமாக உயர்கல்வி மூலமாக மட்டுமே அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை அடைய முடியும்.
தமிழ்நாடு அரசு உங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதற்காக பல முயற்சிகளை எடுத்து வருகிறது. எனவே, அரசு கல்லூரிகள் மற்றும் அரசு தொழில் நுட்பக் கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலமாக கல்வி உதவித்தொகை, மற்றும் முதல் பட்டதாரியாக இருந்தால் அவர்களின் கல்வி கடன் முழுவதையும் அரசு ஏற்றுக்கொள்ளும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து நடைமுறைபடுத்தி வருகிறார்கள்.
இங்கு இருக்கக்கூடிய மாணவர்கள் உங்களுக்கு பொருளாதார சிக்கல்கள் இருந்தால் எங்களிடம் சொல்லுங்கள் உங்கள் பொருளாதார சிக்கல்களை நீக்கி உயர்கல்வி படிப்பதற்கு முழு முயற்சி எடுப்போம் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்கள்.
இம்முகாமில், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாரன், உதவி இயக்குநர் (திறன் மேம்பாட்டு) ஏஞ்சல் விஜயநிர்மலா, துணை ஆட்சியர் (பயிற்சி) சத்யா, மாவட்ட கல்வி அலுவலர் கண்ணன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சையது முகம்மது, ஜெயராஜ் கல்லூரியின் முதல்வர் ஜெயகுமார், பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள், இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment