தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.5.15 ரூபாய் செலுத்தியுள்ளனர்.
உலக புகழ்பெற்ற முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்குகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அரசு பங்களிப்பு 100 கோடி, தனியார் பங்களிப்பு 200 கோடி என மொத்தம் 300 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்ட வளாக பணிகள் ஒருபுறம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருப்பதி கோயிலுக்கு இணையாக வளர்ச்சிப் பணிகள் ஒருபுறம் நடந்து வந்தாலும் உண்டியல் காணிக்கையும் தற்போது திருப்பதிக்கு இணையாக கொட்டுகிறது.
திருவிழா நாட்களில் மட்டுமே லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த நிலையில் தற்போது பௌர்ணமி நாட்களில் கூட லட்சகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.
இதனால் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்பட்டு வருகிறது.
இதையடுத்து, செப்டம்பர் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி (23.09.2024 மற்றும் 24-09-2024) கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் திருக்கோயில் தக்கார் அருள்முருகன் தலைமையிலும் திருக்கோயில் இணை ஆணையர் ஞானசேகர் முன்னிலையில் எண்ணப்பட்டது.
இதில், தூத்துக்குடி உதவி ஆணையர் செல்வி, கண்காணிப்பாளர் கோமதி, மற்றும் சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேத பாடசாலை உழவாரபணிக்குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
முதல்நாள் காணிக்கை எண்ணப்பட்டதில் 4 கோடியே 34 லட்சத்து 72 ஆயிரத்து 955 ரூபாயும், இரண்டாம் நாள் எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையானது 81 லட்சத்து 16 ஆயிரத்து 879 ரூபாயும் மொத்தம் 5 கோடியே 15 லட்சத்து 89 ஆயிரத்து 834 ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.
அதேபோல், தங்கம் 2,352 கிராமும், வெள்ளி 41,998 கிராமும், 1589 வெளிநாட்டு கரன்சிகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். அதே போல் யானை பராமரிப்புக்கான உண்டியல் மூலம் 1,67,860 ரூபாயும், கோசலை பராமரிப்புக்காக 82,722 ரூபாயும் வருவாயாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் செய்திகளுக்காக-தூத்துக்குடி மாவட்ட நிருபர் சுந்தரராமன்
No comments:
Post a Comment