தூத்துக்குடி - அனுமதிக்கப்பட்ட குளம், கண்மாய்களில் வண்டல் மண் எடுத்து மண் வளத்தை மேம்படுத்திக்கொள்ள விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 10 August 2024

தூத்துக்குடி - அனுமதிக்கப்பட்ட குளம், கண்மாய்களில் வண்டல் மண் எடுத்து மண் வளத்தை மேம்படுத்திக்கொள்ள விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு.


தூத்துக்குடி - அனுமதிக்கப்பட்ட குளம், கண்மாய்களில் வண்டல் மண் எடுத்து மண் வளத்தை மேம்படுத்திக்கொள்ள விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு.



தூத்துக்குடி, ஆகஸ்ட்.09, மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 மற்றும் 18ம் தேதிகளில் பெய்த அதீத கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக விவசாய நிலங்களில் மேல் மண் அரிக்கப்பட்டும், சில இடங்களில் மணல் படிந்தும் மண் வளம் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் மாவட்டத்தில் இறவை மற்றும் மானாவாரிப் பகுதிகளில் இராபி பருவப் பயிர் சாகுபடிக்கான பணிகள் துவங்க உள்ள நிலையில் விவசாய நிலங்களில் மண் வளத்தைப் பெருக்கி மகசூலை அதிகரிக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள அரசு குளங்களில் வண்டல் மண் எடுத்து பயன்படுத்திக்கொள்ள விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.


தமிழ்நாடு அரசு, விவசாயிகள் பயன்பெறும் பொருட்டு இலவசமாக வண்டல் மண் வழங்குவது குறித்த நடைமுறையை அரசு எளிமைப்படுத்தியுள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் பராமரிப்பில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 875 குளங்கள், கண்மாய்கள், குட்டைகளில் இருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதற்கு ஏதுவாக தூத்துக்குடி மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.3, நாள்:01.07.2024-ல் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.


அதன் அடிப்படையில் விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதற்கான விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு வரப்பெற்ற விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களை சரிபார்த்து விண்ணப்பம் பெறப்பட்ட 10 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரால் அனுமதி வழங்கப்படும்.


விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட விபரம் அப்பகுதியைச் சார்ந்த உதவி வேளாண்மை அலுவலருக்கு தெரியப்படுத்தப்படும். அவர் சம்பந்தப்பட்ட விவசாயியை தொடர்பு கொண்டு அவரின் வசதிக்கேற்ப மண் எடுக்க வேண்டிய நாள், இடம், நேரம் ஆகியவற்றை குளத்தின் பொறுப்பாளரை அணுகி அதற்கான அனுமதியை பெற்றுத் தருவார்.


விவசாயிகள் தங்களின் நன்செய் நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டருக்கு (26.48யூனிட்) மிகாமலும் புன்செய் நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டர் (31.78 யூனிட்) என்ற அளவிற்கு மிகாமலும் அனுமதி பெற்றுக்கொள்ளலாம். விவசாயிகள் தங்கள் வட்டத்தில் அனுமதி வழங்கப்பட்ட குளத்திலிருந்து காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தங்களுடைய வாகனம் அல்லது வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்களைக் கொண்டு வண்டல் மண் எடுத்துச் செல்லலாம். அவ்வாறு எடுத்துச் செல்லப்படும் வண்டல் மண் சம்பந்தப்பட்ட விவசாயிகள் நிலத்தில் தான் பயன்படுத்தப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலர்கள் உறுதி செய்வார்கள்.


மேலும், விவசாய பெருமக்கள், வண்டல் மண் எடுப்போர் வேளாண் பயன்பாட்டிற்கு அல்லாமல் இதர பயன்பாடுகளுக்கு எவரேனும் முறைகேடாக கொண்டு செல்லும் பட்சத்தில் கீழ்காணும் வருவாய் கோட்டாட்சியர்கள் தூத்துக்குடி கைபேசி எண்.9445000479, திருச்செந்தூர் கைபேசி எண்.9445000480, கோவில்பட்டி கைபேசி எண்.9445000481 ஆகிய கைபேசி எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad