கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய ஆய்வு கூட்டம்.
தூத்துக்குடி, மே 08, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (08.05.2024) மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த் தெரிவித்ததாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலமாகவும், சிறிய குடிநீர் திட்டங்கள் மூலமாகவும், ஆழ்துளை கிணறுகள் மூலமாகவும், திறந்தவெளி கிணறுகள் மூலமாகவும் நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடைகாலத்தில் தேவைக்கேற்றார்போல் நீரை பயன்படுத்த வேண்டுமென பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பொதுமக்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பான குடிநீரில் குளோரின் அளவினை உறுதி செய்து விநியோகம் செய்ய வேண்டும். மேலும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை உரிய கால இடைவெளியில் சுத்தம் செய்த பின்னர் நீரேற்றம் செய்ய வேண்டும்.
குடிநீர் பிரச்சனைகள் நிலவும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அப்பகுதிக்கு நேரில் சென்று உடனடியாக தீர்வு காண வேண்டும். குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும், நகராட்சி நிர்வாகத்துறை அலுவலர்களும் தற்போது செயல்பட்டு வரும் பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து தடைகளின்றி பராமரித்திட வேண்டும்.
மேலும், நடைபெற்று வரும் குடிநீர் தொடர்பான திட்டப்பணிகள் அனைத்தும் விரைவாக நிறைவு செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மற்றும் நீரேற்று நிலையங்கள் தடையின்றி தொடர்ந்து செயல்படுவதற்கு சீரான தடையில்லாத மின்சாரம் அவசியம். எனவே இத்தகைய திட்டப்பணிகளுக்கு மின்சாரம் தடையின்றி கிடைப்பதை மின்சாரத்துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். ஊராட்சிப் பகுதிகளில் சிறிய குடிநீர் திட்டங்கள் மூலமாகவும், ஆழ்துளை கிணறுகள் மூலமாகவும் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீர் பணிகளில் பற்றாக்குறை ஏதேனும் ஏற்படும்பட்சத்தில் உடனடியாக ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் போன்ற இடங்களில் ஓ.ஆர்.எஸ். கரைசல் தொடர்ந்து வழங்குவதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். கடைகள் மற்றும் நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் அனைத்து வகையான வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சுத்தமான குடிநீர், பொதுவான இருப்பிட வசதி, சுத்தமான கழிப்பறை வசதி, சுழற்சி முறையில் ஓய்வு உள்ளிட்டவை ஏற்படுத்தி தர வேண்டும். குறிப்பாக உப்பளத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு வெப்ப அலை குறித்து தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தி, நடமாடும் மருத்துவக் குழு மூலம் வெப்ப அலை குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
உப்பளத் தொழிலில் தொழிலாளர்களை காலை 10 மணி வரை மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
குடிநீர் மற்றும் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்குவதை தொழிலாளர் நலத்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். அதுபோன்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், திருத்தலங்கள், காய்கறி சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலில் தொடர்ந்து குடிநீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், ஊராட்சிப் பகுதிகளிலும் தண்ணீர் பந்தல் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
வெப்ப அயற்சியில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள் குறித்து கால்நடை வளர்ப்பவர்களுக்கு கால்நடை பராமரிப்புத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதுபோன்ற கால கட்டங்களில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் அவர்கள், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு அவர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment