உப்பின் அளவினை சிப்ஸ் போன்ற திண்பண்டங்களில் பொட்டலங்களில் மேல் உறைகளில் குறிப்பிட வேண்டும் - எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கோரிக்கை.
தூத்துக்குடி மே.18, தூத்துக்குடியில் எம்பவர் இந்தியா சார்பில் பீச் ரோட்டில் அமைந்துள்ள எம்பவர் மக்கள் மருந்தகத்தில் உலக உப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசிய எம்பவர் இந்தியா கௌரவ செயலாளர் ஆ.சங்கர் கூறியதாவது - கடந்த 20 ஆண்டுகளாக எம்பவர் இந்தியா சார்பில் உணவில் அயோடின் உப்பு அவசியம் குறித்த விழிப்புணர்வை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தி வருகிறோம்.
நமது உணவில் அன்றாடம் பயன்படுத்தும் உப்பின் அளவை குறைத்தாலே பல்வேறு நோய்களை தவிர்க்க முடியும் என்கின்ற நிலையில் உலக சுகாதார நிறுவனம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உப்பின் அளவை கண்டிப்பாக குறைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் உப்பு உற்பத்தியில் முதலாவதாக குஜராத்தும், அதற்கு அடுத்தபடியாக தமிழகமும் விளங்குகிறது.
தமிழகத்தை பொறுத்த வரையில் வேதாரண்யம், மரக்காணம், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் உப்பு உற்பத்தி மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் உப்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. மற்ற மாவட்டங்களில் விளையும் உப்பினை விட தூத்துக்குடி மாவட்டத்தில் விளையும் உப்பு சுவை அதிகமாக இருக்கும்.
"உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பதைப் போல்", உப்பு சேர்க்காமல் உணவின் அசல் சுவையே தெரியாது. அதே போல, அதிக உப்பு சேர்த்தாலும் சாப்பிட முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவில் உப்பு சேர்க்க வேண்டும். இது தான் சரியான அளவு என்பதை எதை வைத்தும் அளவிட முடியாது. அந்த அளவிற்கு நாம் உண்ணும் உணவில் மிக முக்கிய பங்கு வகிப்பது உப்பு தான். இந்நிலையில் நாம் உணவில் சேர்க்கும் உப்பின் விகிதத்தை 30% குறைத்துக்கொள்ள வேண்டுமென ஒரு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், உடலுக்கு மிகவும் தேவையான அடிப்படை ஊட்டச்சத்தாக விளங்கும் சோடியம் எனப்படும் உப்பு சற்று அதிகரித்தாலும் இதய நோய், பக்கவாதம், ஆயுள் காலம் குறைவது போன்ற பிரச்சனைகள் நேரிடுவதாக எச்சரித்துள்ளது. எனவே குழந்தைகள உண்னும சிப்ஸ் போன்ற பொட்டலம் இடப்பட்ட உணவுப் பொருட்களில் உப்பின் அளவை அவற்றின் மேல் உறைகளில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என்கின்ற நடைமுறையை கொண்டு வர வேண்டும்.
பொதுவாக சமைக்கும் போது பாதியளவு உப்பு சேர்த்து, சமைத்து சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் சாப்பிடும் மேஜை மீது உப்பு ஜாடியை வைத்துக் கொள்ள வேண்டாம். உப்பு அதிகமாக சேர்த்து பொட்டலம் செய்யப்பட்ட உணவுகளை அறவே ஒதுக்கி விட வேண்டும். உப்பு சேர்த்து செய்யும் ஊறுகாய் உள்ளிட்டவற்றை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே நாம் உணவில் உப்பின் அளவினை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்வோம். உணவு பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதல்படி சர்க்கரை, உப்பு, எண்ணெய் வகைகளை உணவில் குறைப்போம்! நலமுடன் வாழ்வோம்!" என ஆ.சங்கர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் & தாலுகா தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் - தமிழக குரல் செய்திகள்.

No comments:
Post a Comment