வாக்குசாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் தகவல். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 18 April 2024

வாக்குசாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் தகவல்.

பாராளுமன்ற பொதுத் தேர்தல்  2024
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடிகளில் வாக்களிக்க வருபவர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கோ.லட்சுமிபதி தகவல்.


இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழ்நாடு முழுவதும் நாளை (19.04.2024) பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவித்ததைத்தொடர்ந்து, 

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியை உள்ளடக்கி 6 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், VVPAT மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தும் பொருட்கள் கொண்டு செல்லும் பணிகள் இன்று நடைபெற்று வருவதை தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி இன்று (18.04.2024) நேரில் சென்று பார்வையிட்டார்.


பின்னர் அவர் தெரிவித்ததாவது:
தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நாளை (19.04.2024) நடைபெற உள்ள நிலையில் மொத்தம் 1674 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இவை 899 இடங்களில் அமைந்துள்ளன. இவை அனைத்தும் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு குழுக்களாக அமைக்கப்பட்டுள்ளன.  அந்த குழுக்கள் மூலம் வாக்குசாவடி மையங்களுக்கு வாக்குசாவடி பொருட்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இன்றைய தினம் 8000 வாக்குசாவடி அலுவலர்கள் தாங்கள் பணிபுரிய உள்ள வாக்குசாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களிடம் தேர்தலுக்கு தேவையான பொருட்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 


தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரையில் 288 பதற்றமான வாக்குசாவடி மையங்கள் உள்ளதால் அந்த வாக்குசாவடி மையங்கள் உட்பட 65 சதவீதம் 1557 வாக்குசாவடி மையங்களுக்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை அனைத்தும் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. 


அந்த வாக்குசாவடி மையங்களில் ஏதாவது அசம்பாவித சம்பங்கள் ஏற்பட்டால் புகார் தெரிவிப்பதற்கு மண்டல அலுவலர்கள் மற்றும் வாக்குசாவடி அலுவலர்களுக்கு தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. வாக்குசாவடிகளில் வாக்களிக்க வருபவர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது வெயில் காலம் என்பதால் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 


மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு ஒவ்வொரு வாக்குசாவடிக்கும் ஒரு சக்கர நாற்காலி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர வாக்குசாவடி மையங்களில் உதவி மையம் அமைக்கப்பட்டு வாக்குசாவடி அலுவலர்கள் வாக்களிக்க வருபவர்களுக்கு உதவி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

288 பதற்றமான வாக்குசாவடி மையங்களை கண்காணிப்பதற்கு சுழற்சி முறையில் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு இன்றைய தினம் அவர்களும் அங்கு செல்வதற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வாக்குப்பதிவை நேரடியாக கண்காணித்து பொது பார்வையாளர்களுக்கு அறிக்கைகளை அளிப்பார்கள். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் ஒரு மகளிர் வாக்குசாவடி அமைக்கப்பட்டுள்ளது. 

இது தவிர ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு மாடல் வாக்குசாவடி அமைக்கப்பட்டுள்ளது என தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.


இந்த நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி உதவி தேர்தல் அலுவலர் / வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, தூத்துக்குடி வட்டாட்சியர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad