தரமற்ற பலகாரங்கள் தயாரித்து விற்றால் நடவடிக்கை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் எச்சரிக்கை! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 8 October 2022

தரமற்ற பலகாரங்கள் தயாரித்து விற்றால் நடவடிக்கை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் எச்சரிக்கை!

தீபாவளி பண்டிகை கால இனிப்பு மற்றும் கார பதார்த்தங்களை சுகாராரமற்ற முறையில் தயாரித்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். 


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தற்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ள இந்த காலகட்டத்தில் அனைத்து விதமான இனிப்பு மற்றும் கார வகை உணவு பதார்த்தங்களின் விற்பனைகளும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.  முக்கியமாக தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலத்தில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், காரங்கள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவு பொருட்களை மக்கள் விரும்பி வாங்கி உண்பதும், உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் அன்பளிப்பு அளிப்பதும் நமது கலாச்சாரமாக விளங்கி வருகிறது. 


எனவே, இனிப்பு மற்றும் கார வகை போன்ற உணவு பதார்த்தங்களின் தயாரிப்பாளர்களும், விற்பனையாளர்களும் பின்வரும் உணவு பாதுகாப்பு நிபந்தனைகளைப் பின்பற்றி தரமான மற்றும் பாதுகாப்பான உணவு நுகர்வோரைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டியது கட்டாயமாகும்.


தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் கார பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள், தற்காலிக ஸ்வீட் ஸ்டால்கள் உட்பட அனைத்து இனிப்பு மற்றம் கார தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்ற பின்னரே பொது மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். இந்த வணிகர்கள் மட்டுமல்லாது அனைத்து வகையான உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு அலுவலகத்தினை தொடர்பு கொண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கான இணையத்தளம்: https://foscos.fssai.gov.in 


ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் FSSAI-ல் உரிமம் பெற்ற தரமான மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் தரம் குறித்து சந்தேகத்திற்கிடமாக உள்ள மூல உணவுப் பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட செயற்கை நிறமிகளை அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாகவோ உபயோகிக்கக் கூடாது.


ஒருமுறைப் பயன்படுத்தி ஆறவைத்த சமையல் எண்ணெயை மறுபடியும் சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது. மேலும், எண்ணெய் கொதிநிலையில் இருக்கும் பொழுது, புதிய சமையல் எண்ணெயை அதனுடன் கலக்கக்கூடாது. ஒருமுறைப் பயன்படுத்தி ஆறிய நிலையில் உள்ள சமையல் எண்ணெயை பயோ-டீசல் தயாரிப்பிற்கு FSSAI-ல் அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பு நிறுவனத்திடம் ஒப்படைத்து, அதற்கு உரிய விலையைப் பெற்றுக்கொள்ளலாம்.


பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு, விபரச்சீட்டு இடும்போது அதில், தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு (அ) பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் (காலவதியாகும் காலம்) சைவ மற்றும் அசைவ குறியீடு, உள்ளீட்டுப் பொருட்கள், ஊட்டச்சத்து விபரம், FSSAI உரிமம் ஆகியனவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.


ஸ்வீட் பாக்ஸ்களை விற்பனை செய்யும் வணிகர்கள் அந்த பாக்ஸில் ஸ்வீட்ஸ் தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் உண்ணத் தகுந்த காலம் ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட வேண்டும். உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதரமான சூழலில் பொது மக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும்.


ஸ்வீட் ஸ்டால்களில் பயன்படுத்தப்படும் நெய் மற்றம் எண்ணெய் விபரங்களை கடையில் நுகர்வோர்களின் பார்வையில் தெரியுமாறு காட்சிப்படுத்தப்பட வேண்டும். அக்மார்க் மற்றும் FSSAI உரிமம் நெய், FSSAI உரிமம் பெற்ற பொட்டலமிட்ட எண்ணெய் வகைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயைத் திரும்ப பயன்படுத்துதல் கூடாது.


FSSAI-ன் வழிகாட்டுதல்படி, விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து ஸ்வீட் வகைகளுக்கும் தயாரிப்பு தேதி மற்றும் உண்ணத் தகுந்த காலம் ஆகியவற்றை அந்தந்த ஸ்வீட் அருகே ஒரு சிறிய போர்டில் எழுதி காட்சிப்படுத்த வேண்டும்.  உதாரணம்: ரசகுல்லா: குளிர்சாதனப் பெட்டியில், 2 நாட்கள். ஜிலேபி: அறை வெப்பநிலையில் 2 நாட்கள். பால் கோவா மற்றும பேடா: அறை வெப்பநிலையில் 4 நாட்கள். அதிரசம், மைசூர் பாக் மற்றும் அல்வா: அறை வெப்பநிலையில் 7 நாட்கள். 


பணியாளர்கள் கையுறை, முடிக் கவசம் போன்ற பாதுகாப்புக் கவசங்கள் அணிந்து தான் பணியாற்ற வேண்டும். அனைத்துப் பணியாளர்களும் கரோனா தடுப்பூசி அவசியம் செலுத்தியிருக்க வேண்டும்.


பொதுமக்களும், பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது, உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்குமாறும், பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  மேலும், இது தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்திற்கு 0461-2900669 அல்லது 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகக் வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்  தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad