தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் விழிப்புணர்வு தின விழாவில் சமூக நலன் / மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் திருநங்கைகளுக்கு தேசிய அடையாள அட்டைகளையும், நலத்திட்ட உதவிகளையும் இன்று (31.03.2022) வழங்கினர். மாவட்ட ஆட்சியர் மருத்துவர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்: டாக்டர் கலைஞர் மூன்றாம் பாலினத்தவர்களை சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக அவர்களை திருநங்கைகள் என்று அழைத்ததோடு திருநங்கைகள் நல வாரியத்தினை ஏற்படுத்தி ஏப்ரல் 15ம் தேதி அன்று திருநங்கைகள் தினம் என அறிவித்தார்கள். இதன் மூலம் இந்தியா முழுவதும் திருநங்கைகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதோடு மற்ற மாநிலங்களும் திருநங்கைகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கு முன்னோடியாக தமிழ்நாடு விளங்கியது.
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் திருநங்கைகளுக்கென பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று திருநங்கைகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தொழில்கள் தொடங்குவதற்கு கடன் உதவிகள் மற்றும் மானியம் வழங்கப்படுகிறது என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் திருநங்கைகளுக்கென பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். 2008ம் ஆண்டு திருநங்கைகளுக்கு நலவாரியத்தினை டாக்டர் கலைஞர் கொண்டு வந்தார். தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அனைவரும் மேம்படும் வகையில் அனைத்து திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தும் என அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
தொடர்ந்து 16 திருநங்கைகளுக்கு திருநங்கை தேசிய அடையாள அட்டைகளையும், மேலும் 5 திருநங்கைகளுக்கு சிறப்பு விருதுகளையும் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினார்கள். மேலும் சத்தியவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 75 பயனாளிகளுக்கு தலா 1 இலவச தையல் இயந்திரங்களை அமைச்சர்கள் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் மரு.வீரபத்திரன், மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, திருநங்கைகளின் பிரதிநிதி ஸ்வீட்டி மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆனந்த சேகரன், உமரிசங்கர், ஜெயக்குமார் ரூபன், ராமஜெயம் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment