தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், சிவகளை ஊராட்சியில் இன்று (27.11.2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் வருவாய்த்துறை, மாவட்ட தொழில் மையம், வேளாண்மை மற்றும உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை போன்ற அரசுத்துறைகள் சார்பில் 74 பயனாளிகளுக்கு ரூ.53.02 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும் போது தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பிறந்த குழந்தைகள் முதல் அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அரசுத்துறைகளின் வாயிலாக பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் ஒரு கடைக்கோடி கிராமத்தினை தெரிவு செய்து அக்கிராமத்திற்கு அரசு இயந்திரங்கள் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து அரசுத்துறைகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள், அரசின் திட்டங்கள் குறித்து அறிந்து பயன்பெறும் வகையில் திட்ட விளக்கக் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மேலும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அவற்றை பரிசீலனை செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு பொதுமக்களிடமிருந்து முன்னோடி மனுக்கள் பெறப்பட்டு, அவற்றை பரிசீலனை செய்து தகுதியான மனுதாரர்களுக்கு அவர்களுக்குரிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்று பல்வேறு விதமான குறைதீர்ப்பு நடவடிக்கைகளை நமது அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு திங்கள்கிழமையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தின கோரிக்கை மனுக்களை பெறக்கூடியது. கடந்து ஒரு ஆண்டாக நடைபெறக்கூடிய உங்களைத்தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தாலுகாவை தேர்ந்தெடுத்து அந்த பகுதியில் உள்ள முக்கிய இடங்களிளெல்லாம் ஆய்வு செய்து அங்கும் மனுக்களை பெறக்கூடிய திட்டம், அதன்பிறகு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய ஒரு உன்னத திட்டமான மக்களுடன் முதல்வர் முகாம்களை அமைத்து அதன்மூலம் மனுக்களை பெற்ககூடிய திட்டம்.
இப்படி பல்வேறு வகையான திட்டங்களின் மூலம் மக்களினுடைய கோரிக்கை மனுக்களைப் பெற்று அதற்கான உகந்த தீர்வுகளை நமது அரசுத்துறை அலுவலர்கள் செய்து வருகிறார்கள். இதில் அதிகமான கோரிக்கை மனுக்கள் வரக்கூடிய துறைகளைச் சேர்ந்தவர்கள் விரைவாகவும், சரியான தீர்வும் கொடுக்க வேண்டும். குறிப்பாக வருவாய்துதுறையில் அதிகமான கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது. இந்த மனுக்கள் அனைத்தையும் வட்டாட்சியர், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் ஆகிய அனைவரும் சரியான முறையில் ஆய்வு செய்து உரிய தீர்வுகளை அந்த மனுதாரருக்கு வழங்க வேண்டும்.
அதனைடிப்படையில், பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றையதினம் நடைபெறும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் 74 பயனாளிகளுக்கு ரூ.53.02 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்படுகிறது.
இதுபோன்ற அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கடைக்கோடி கிராமங்களில் வசிக்கக்கூடிய மக்களுக்கு சென்று சேர வேண்டுமென்ற நோக்கத்தில் தான் இந்த மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு தனிமனிதன் சார்ந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது போல் பொதுமக்கள் சார்ந்த கோரிக்கைகளை இந்த நேரத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக நமது திருவைகுண்டம் வட்டாரத்தில் சில இடங்களில் இளம் வயது திருமணங்களும், இளம் வயது திருமணங்களில் ஏற்படக்கூடிய தாய்மைப் பேரடைந்த நிகழ்வுகளும் நடைபெறுவதாக அவ்வப்பொழுது தெரியவருகிறது. இளம் வயதில் திருமணம் செய்வதை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் தீவிரமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
18 வயதிற்கு குறைவான வயதில் எந்த பெண்களுக்கும் திருமணம் செய்து வைக்க கூடாது. சில இடங்களில் அந்த மாதிரியான பழக்கங்கள் இருப்பது வருந்தத்தக்க ஒன்றாகும். 18 வயதுக்கு குறைவான வயதில் எந்தவொரு பெண் குழந்தைக்கும் திருமணம் செய்து வைத்தலை ஊக்குவிக்கக் கூடாது. குழந்தைத் திருமணச் சட்டப்படி அது குற்றமாகும். சிறுவயதில் திருமணம் செய்வது என்பது அந்த குழந்தைக்கு உகந்ததாக இருக்காது. உடலளவிலும் மனதளவிலும் சிக்கல் ஏற்படும். ஆகையால் இளம் வயது திருமணங்களை முற்றிலும் தடுப்பதற்கான உறுதிமொழியினை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அரசுத்துறைகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உங்களுக்கு எடுத்துக்கூறி இருப்பார்கள்.
எந்த மாதிரியான திட்டங்கள் எல்லாம் நீங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று பார்த்து அத்திட்டத்தில் பயன்பெற உரிய முறையில் விண்ணப்பிக்கும்பட்சத்தில் தங்களுடைய மனுக்களை பரிசீலனை செய்து நலத்திட்டங்களை வழங்குவதற்கு அலுவலர்கள் தயாராக உள்ளனர். இம்முகாமில், தனிநபர் சார்ந்த அல்லது பொது நலன் சார்ந்த எந்தஒரு கோரிக்கையாக இருந்தாலும் நீங்கள் மனு அளிக்கலாம். அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்படும்.
மேலும், நமது பகுதியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அங்கன்வாடி மையத்தினுடைய பொறுப்பாளர்கள் அனைவரும் ஒவ்வொரு குழந்தையையும் ஊட்டச்சத்து மிகுந்த குழந்தையாக வளர்வதை உறுதி செய்ய வேண்டும். எந்தக் குழந்தையும் குறைவான வளர்ச்சியோ அல்லது எடையோ இருக்கக் கூடாது. அவ்வாறு இருக்கும் குழந்தைகளை முழுமையாக கண்டறிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வயதுக்கேற்ற எடையினையும், வயதுக்கேற்ற வளர்ச்சியையும் அடைவதற்கான முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என இந்த நேரத்தில் உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த ஊர் மாபெரும் பாராம்பரியத்தினுடைய ஒரு முக்கியமான ஊர். தமிழ்நாட்டினுடைய வரலாற்றையே மாற்றி எழுதிய ஒரு முக்கியமான தொல்லியல் ஆராய்ச்சி தளமாகும். இவ்வாறு நாகரிகத்தை நீங்கள் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கு உங்கள் ஊரில் உள்ள தொல்பழங்குடிகள் வாழ்ந்து காட்டியது போல் நாகரிகமான நல்ல ஒரு முன்மாதிரியான ஊராக இந்த ஊர் திகழ வேண்டுமென தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சே.சுகுமாறன், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஷ்வரன், மாவட்ட வழங்கல் அலுவலர் உஷா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பென்னட்ஆசிர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், இணை இயக்குநர் (வேளாண்மை) பெரியசாமி, உதவி ஆணையர் (கலால்) கல்யாணகுமார், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மனோரஞ்சிதம், ஏரல் வட்டாட்சியர் மு.செல்வகுமார், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் (ஏரல் வட்டம்) கைலாச குமாராசாமி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் காயத்ரி, சிவகளை ஊராட்சி மன்றத் தலைவர் ம.பிரதீபா, வட்டார சுகாதார அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment