தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சேரலாம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 24 October 2024

தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சேரலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறிஸ்தவ அனாதை இல்லங்கள், தொழுநோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. 

இந்நல வாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட ரோமன் கத்தோலிக் திருச்சபை அதன் பேராயர்கள் மற்றும் ஆயர்கள், புராட்டஸ்டாண்ட் திருச்சபை ஆயர்கள், சினாட் ஆப் பெண்டகோஸ்டல் சர்ச்சஸ் போன்ற அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளிடமிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். 

இந்த வாரியத்தில் நலத்திட்டங்கள் கல்வி உதவித்தொகை 10-ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ. பாலிடெக்னிக் படிப்பு, தொழிற்கல்வி படிப்பு, பட்டப்படிப்பு வரை. விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை ரூ.1 லட்சம் ஆகும். விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை ஆகும். இயற்கை மரணம் உதவித்தொகை ரூ.20 ஆயிரம் ஆகும். ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.5 ஆயிரம் ஆகும். திருமண உதவித்தொகை ஆண்களுக்கு ரூ.3 ஆயிரம் மற்றும் பெண்களுக்கு ரூ.5 ஆயிரம் ஆகும். 

மகப்பேறு உதவித்தொகை ரூ.6 ஆயிரம் மற்றும் கருச்சிதைவு, கருக்கலைப்பு உதவித் தொகை ரூ.3 ஆயிரம் ஆகும். கண்கண்ணாடி உதவித்தொகை ரூ.500, முதியோர் ஓய்வூதியம் (மாதந்தோறும்) ரூ.1,000 ஆகும். மேலும், விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுமான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad