தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரைத் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் புதூர் பிச்சம்பாளையத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் மணிகண்ட பிரபு (28). இவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் 2-ஆம் ஆண்டு படிக்கிறார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகவும் பணியாற்றி வருகிறார்.
மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அவர் பணியிலிருந்தபோது, முத்தையாபுரம் தோப்புத் தெருவைச் சேர்ந்த ஜெயம் முருகன் மகன் கார்த்திக்(22) என்பவர் கத்திக்குத்து காயங்களுடன் நேற்று அதிகாலை சிகிச்சைக்காக வந்தாராம். அவரை பயிற்சி மருத்துவர் மணிகண்ட பிரபு உள்நோயாளியாகச் சேர்த்து சிகிச்சை அளித்தார். மதுபோதையில் இருந்த கார்த்திக் நன்றாக தூங்கி விட்டாராம்.
சற்றுநேரம் கழித்து, எக்ஸ்ரே எடுப்பதற்காக கார்த்திக்கை, பயிற்சி மருத்துவர் மணிகண்ட பிரபு அழைத்தாராம். அப்போது வாக்குவாதம் செய்த கார்த்திக், பயிற்சி மருத்துவர் மணிகண்ட பிரபுவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், தென்பாகம் போலீசார் வழக்குப்பதிந்து கார்த்திக்கை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் செய்தியாளர்:சி.நாகராஜ்
No comments:
Post a Comment