தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் பெண் உள்பட 2 பேர் வந்தனர். அப்போது அங்கு வந்த எஸ்பி ஆல்பர்ட் ஜானை சந்தித்த அந்த பெண், தான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும், உத்தர பிரதேசம் மாநில கல்வித் துறையில் உதவி செயலாளராக இருப்பதாகவும் கூறினார்.
புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒருவர் தன்னிடம் பணம் வாங்கிக் கொண்டு அதனை திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாகவும் புகார் தெரிவித்தார். ஆனால் அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த எஸ்பி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மூலம் விசாரணை நடத்தியதில் அந்த பெண் போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் 2 பேரும் நெல்லை அருகே உள்ள தாழையூத்தை சேர்ந்த மங்கையர்கரசி (44), ரூபிநாத் (42) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து சிப்காட் போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்தனர். ரூபிநாத் தூத்துக்குடி பேரூரணி சிறையிலும், மங்கையர்கரசி நெல்லை கொக்கிரகுளம் பெண்கள் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட 2 பேர் குறித்தும் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில், மங்கையர்கரசி சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் ஆகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து நெல்லைக்கு வந்து, ஒரு கல்லூரியில் பேராசிரியையாக வேலை செய்து வந்தார்.
பின்னர் தாழையூத்தை சேர்ந்த ரூபிநாத் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தாழையூத்து பகுதியில் பள்ளிக்கூடம் நடத்தி வரும் ரூபிநாத், பா.ஜனதா கட்சியின் நெல்லை மாவட்ட வெளிநாடு வாழ் தமிழர் நலன் தலைவராக பதவி வகித்து வருகிறார் என்ற விவரமும் தெரியவந்தது. இந்த சம்பவங்களுக்கு இடையே நெல்லை போலீசாரும், மங்கையர்கரசி, ரூபிநாத் ஆகியோர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
அதாவது, ரூபிநாத்துக்கு துப்பாக்கி உரிமம் கேட்டு நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பித்து உள்ளனர். இதுதொடர்பான மனு விசாரணைக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து ரூபிநாத், மங்கையர்கரசி ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்றனர்.
அங்கும் உத்தரபிரதேச மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும், கணவர் ரூபிநாத்துக்கு துப்பாக்கி உரிமம் கேட்டு உள்ளேன். அதற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.
பின்னர் துப்பாக்கி உரிமம் அளிப்பது தொடர்பாக, தாசில்தார் ஜெயலட்சுமி, நாரணம்மாள்புரம் கிராம நிர்வாக அலுவலர் பொன்னுமுத்து மற்றும் போலீசார் மங்கையர்கரசி கொடுத்த முகவரிக்கு விசாரிக்க சென்றனர். அப்போது தான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும், தன்னை பற்றி எப்படி விசாரிக்க வரலாம் என்று கேட்டதுடன், மேலும் உடனடியாக துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டும் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தாசில்தார் ஜெயலட்சுமி தாழையூத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக தாழையூத்து போலீசார், 2 பேரும் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். தற்போது தூத்துக்குடியில் போலீசாரிடம் சிக்கி 2 பேரும் கைதாகி சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இதையடுத்து தாழையூத்து போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் கைது செய்யவும், 2 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் நெல்லை மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். காவலில் எடுத்து 2 பேரிடமும் விசாரணை நடத்தினால் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment