தூத்துக்குடி மாவட்டத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க 7.2 கோடி நிதி ஒதுக்கீடு மாவட்ட ஆட்சியர் தகவல். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 27 August 2024

தூத்துக்குடி மாவட்டத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க 7.2 கோடி நிதி ஒதுக்கீடு மாவட்ட ஆட்சியர் தகவல்.

தூத்துக்குடி, ஆகஸ்ட்.27, நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையின் மூலம் சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க அரசு மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும் பிற விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் வழங்கப்படுகிறது.

விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைப்பதால் தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்தபடுவதுடன் குறைந்த நீரில் அதிக பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யலாம். சொட்டுநீர் பாசனம் மூலம் வேருக்கு மட்டும் பாசன நீர் பாய்வதால் களைகள் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படும். ஆகையால் களை கொல்லி மற்றும் களை எடுக்கும் செலவு வெகுவாக குறைகிறது. சொட்டுநீர் பாசனம் மூலம் பாசன நீரில் உரங்களையும் கலந்து உரமிடலாம். அவ்வாறு உரமிடுவதன் மூலம் உரங்கள் வீணாகாமல் பயிரின் வேர்ப் பகுதியில் இடப்பட்டு முழுமையான பயன் கிடைக்கிறது. 

உரங்கள் சிக்கனமாக முறையில் பயன்படுத்தப்படுவதால் உர செலவும் குறையும். குறைந்த வேலையாட்கள் பயன்படுத்தப்படுவதால், சாகுபடி செலவுகளும் இதன் மூலம் குறைக்கப்படுகிறது. பயிர்கள் திடமாகவும், ஆரோக்கியத்துடனும் வளர்வதால் அதிக மகசூல் மற்றும் அதிகபட்ச நிகர வருமானம் சொட்டு நீர்பாசனம் மூலம் பெற முடியும். 

விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற தங்களின் புகைப்படம், சிட்டா, அடங்கல், நில வரைபடம், ஆதார், குடும்ப அட்டை, சிறு குறு விவசாயி சான்றிதழ், மண்/நீர் மாதிரி ஆய்வு முடிவு அறிக்கை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களின் நகல்களை கொண்டு நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு இணையதளத்தில் (MIMIS Portal) பதிவு செய்யலாம் அல்லது தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்யலாம். சிறு/குறு விவசாயிகள் அதிகபட்சம் 5 ஏக்கர் வரையிலும், இதர விவசாயிகள் 12.5 ஏக்கர் வரையிலும் சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் பெறலாம்.

நுண்ணீர் பாசனம் பதிவு மேற்கொள்ளும்போது விவசாயிகள் துணைநிலை நீர் மேலாண்மை திட்டத்திலும் பதிவு செய்யலாம். இத்திட்டத்தில் நீர் சேகரிப்பு அமைப்பு நிறுவ 50% மானியம் அதிகபட்சமாக ரூ.75,000, குழாய் கிணறு ஆழ்துளை கிணறு அமைக்க 50% மானியம் அதிகபட்சமாக ரூ.25,000, தண்ணீர் கடத்தும் குழாய் அமைக்க ஹெக்டருக்கு 50% மானியம் அதிகபட்சமாக ரூ.10,000 தண்ணீர் ஏற்றும் கருவி மின்/ஆயில் மோட்டாருக்கு 50% மானியம் அதிகபட்சமாக ரூ.15,000 மானியமும் பெற்று பயனடையலாம். 


இந்த ஆண்டு நுண்ணீர்;பாசன திட்டத்தின் கீழ் வேளாண்மைத்துறை மூலம் 450 ஹெக்டேர் சொட்டுநீர் பாசனம் அமைக்க 2.2 கோடியும் மற்றும் தோட்டக்கலை துறையின் மூலம் சொட்டுநீர் பாசனம் 800 ஹெக்டேர் பரப்பில் அமைக்க 5 கோடியும் ஆக 7.2 கோடிகள் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையை போக்க நுண்ணீர் பாசனம் அமைத்து பயனடைய மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad