மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்திட ஏதுவாக ‘விற்பனையாளர் மற்றும் கொள்முதல் செய்வோர் சந்திப்பு” நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 6 July 2024

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்திட ஏதுவாக ‘விற்பனையாளர் மற்றும் கொள்முதல் செய்வோர் சந்திப்பு” நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல்

 


மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்திட ஏதுவாக ‘விற்பனையாளர் மற்றும் கொள்முதல் செய்வோர் சந்திப்பு” நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல்


ஜூலை.06, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்திட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
       
அதன்படி, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் மொத்த கொள்முதல் செய்வோர்களுக்கிடையே ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தவும், மொத்த கொள்முதல் செய்வோர்களுக்கு நேரடியாக மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தியாளர்களை சந்திப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தவும், இச்சந்திப்பு நடத்தப்படுகிறது.


மேலும், உள்நாட்டு சந்தை வாய்ப்பு மட்டுமின்றி வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளைக் கண்டறியும் விதமாகவும் இச்சந்திப்பு நடத்தப்படுகிறது.
       

தூத்துக்குடி மாவட்டத்தில் 13,275 மகளிர் சுய உதவிக்குழுக்களில் 1,55,743 உறுப்பினர்களாக உள்ளனர். இதில் பல்வேறு மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் வேளாண் விளை பொருட்கள், கருப்பட்டி, பனங்கற்கண்டு, கடலை மிட்டாய், மாவு வகைகள், ஊறுகாய் வகைகள், கடல் சார் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள், சத்துமாவு, மசாலா பொடி வகைகள், முருங்கைப்பொடி, பசு நெய், தின்பண்டங்கள், பேக்கரி வகைகள் (ரஸ்க், ஜாம்), பனை ஓலைப் பொருட்கள், செயற்கை நகைகள், மென்பொம்மைகள், பொக்கே, மட்பாண்டப் பொருட்கள், வயர் கூடை, பாய் வகைகள், பஞ்சகவ்ய விளக்கு, சமையல் எண்ணெய் வகைகள், அகர் பத்தி, சாம்பிராணி, ஹேர் ஆயில், குளியல் சோப்பு, துணிப்பை மற்றும் நாப்கின் போன்ற பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.
       

மேற்கண்ட பொருட்களின் உற்பத்தியில் ஈடுபடும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் நேரடியாக பொருட்களை விற்பனை செய்திடவும், கொள்முதல் செய்வோர் நேரடியாக பார்வையிடவும் வருகின்ற 18.07.2024  அன்று தூத்துக்குடி இராமையா மஹாலில் (எண்: 357 பாளையங்கோட்டை ரோடு, சத்யா ஏஜென்சி அருகில்) காலை 10.00 மணிக்கு மாவட்ட அளவிலான ‘விற்பனையாளர் மற்றும் கொள்முதல் செய்வோர் சந்திப்பு” நடைபெறவுள்ளது.
       

எனவே, மாவட்ட அளவில் நடைபெறும் விற்பனையாளர் மற்றும் கொள்முதல் செய்வோர் சந்திப்பில் கொள்முதல் செய்வோர் நேரடியாகக் கலந்துகொண்டு பொருட்களைப் பார்வையிட்டு கொள்முதல் ஆணைகளை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.



மேலும், விபரங்கள் மற்றும் பதிவுகளுக்கு மேலாளர், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கம், மகளிர் திட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தூத்துக்குடி என்ற முகவரியிலும், 9994396051 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி  கேட்டுக் கொண்டுள்ளார்கள்.



தூத்துக்குடி மாவட்டம் & தாலுகா.
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad