நாசரேத்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாமல் சென்ற பாலக்காடு எக்ஸ்பிரஸ் இரயில், ஆத்திரத்தில் டிக்கெட் கவுண்டரில் ஓங்கி அடித்த பயணி - நொருங்கிய கண்ணாடி.
திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு வரை செல்லும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் இரயில் தினமும் நாசரேத் ரயில் நிலையத்திற்கு 12:46 க்கு வந்து 12:47க்கு புறப்பட்டு திருநெல்வேலி செல்கிறது. நாசரேத் 01.10.2023 - அன்று மாதத்தின் கடைசி சனி கிழமை என்பதால் நாலுமாவடி கூட்டம் அதிகம், அதோடு தொடர் விடுமுறை காரணமாக திருச்செந்தூர் சென்று திரும்பும் பயணிகள் கூட்டமும் படிக்கட்டு வரை தொங்கி கொண்டு சென்றனர், இந்நிலையில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் இரயிலுக்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் நாசரேத் இரயில் நிலையத்தில் பயணிகள் ஏற முடியாமல் தவித்தனர்.
ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அதில் ஒரு சிறுவன் தண்டவாளத்தில் விழும் நிலை ஏற்பட்டது. இதனால் அந்த சிறுவனின் குடும்பத்தினர் பதறி போய் இரயிலில் ஏறமுடியாமல் வண்டியை விட்டு விட்டனர்.
அது மட்டுமல்லாமல் பாலக்காடு எக்ஸ்பிரஸ் இரயில் குறைந்த அளவான 10 பெட்டிகளையே கொண்டிருப்பதால் ஒவ்வொரு பெட்டியிலும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவிற்கு உள்ளது. இதனால் பயணிகள் ஒவ்வொரு இரயில் நிலையத்திலும் ஏறுவதும் இறங்குவதும் மிகவும் கடினமாக உள்ளது.
இதுகுறித்து நிலைய அதிகாரிகளிடம் பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு புகார் செய்தனர். ஆனால் அவர்களது கோரிக்கையை ஏற்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் டிக்கெட் பணத்தை திரும்ப தருமாறு கோரிக்கை வைத்தனர். அதற்கும் அவர்கள் செவி சாய்க்காததினால் பாலக்காடு ரயிலுக்காக காத்திருந்து ஏற முடியாமல் ஏமாற்றம் அடைந்த பயணி ஒருவர் டிக்கெட் கவுண்டரில் ஓங்கி அடித்தார்.
அதில் டிக்கெட் கவுண்டர் கண்ணாடி உடைந்து சுக்கு நூறாக நொறுங்கியது. கண்ணாடி வெட்டி அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ரயில் பயணிகளின் சிரமத்தை தவிர்க்க தென்னக ரயில்வே உயர் அதிகாரிகள் திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு வரை செல்லும் எக்ஸ்பிரஸ் இரயிலில் கூடுதலாக பெட்டிகள் இணைத்து பயணிகளுக்கு உதவிடுமாறு பொதுமக்கள், இரயில் பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment