திருச்செந்தூர் நகராட்சியில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தொடங்கியது! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 14 December 2022

திருச்செந்தூர் நகராட்சியில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தொடங்கியது!


திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் உள்ள சாலைகள், தெருக்களில் சுற்றி திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக நெல்லை சாலை, தூத்துக்குடி சாலை, நாகர்கோவில் சாலைகளிலும், கோவில் சுற்றுப்புற சாலைகளிலும் நூற்றுக்கணக்கான மாடுகள் இரவு, பகல் எந்நேரமும் சுற்றி திரிகின்றன.


மேலும், திருச்செந்தூர் பஸ்நிலையம், சந்தையிலும் ஏராளமான மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக நடமாடி வருகின்றன. இதனால் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் கார்கள், பஸ்கள், வேன்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன.


குறிப்பாக திருச்செந்தூர்-நெல்லை சாலையில் குமாரபுரத்தில் மாடுகளின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் மோட்டார் சைக்கிள்  வாகன ஒட்டிகள் மாடுகளால் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.


பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி செல்லும் வேன், பஸ்களும் மாடுகளால் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்து வருகிறது. எனவே, சாலைகள், தெருக்கள், பஸ்நிலைய பகுதிகளில் மாடுகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இந்த நிலையில் மாடுகளின் உரிமையாளர்களுக்கு திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை அறிவிக்கையும் வெளியிடப்பட்டது. ஆனாலும், சாலை தெருக்களில் மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து  திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் மாடுகள் பிடிக்கும் பணி தொடங்கியது. முதல் முறையாக பிடிக்கப்படும் மாடுகளின் கொம்பு பகுதியில் மஞ்சள் நிற பெயிண்டு அடிக்கப்படுகிறது. பின்னர் அதே பெயிண்டு அடித்த மாடுகள் மீண்டும் நகர் பகுதியில் சுற்றி திரிந்தால் உடனடியாக பிடித்து அந்த மாடுகள் ஏலம் விடப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.


சாலைகளில் திரியும் மாடுகளை நகராட்சி நிர்வாகம் பிடித்து நடவடிக்கை எடுத்து வருவதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad